கேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?


கேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?
x
தினத்தந்தி 14 Jun 2021 7:42 PM GMT (Updated: 14 Jun 2021 7:42 PM GMT)

‌வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

அரிய வகை தவளை இனம்

கேரளாவில் அபூர்வ இனமான, ‘பர்ப்பிள் தவளை’ எனப்படும், பன்றி மூக்கு தவளையை 2003-ம் ஆண்டில் டெல்லி பேராசிரியர் பிஜூ, முதன் முறையாக இடுக்கியில் கண்டுபிடித்தார். இது பற்றி 2017-ம் ஆண்டில் வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு, லண்டன் விலங்கியல் பவுண்டேஷன் விருது வழங்கியது. இந்த தவளை இனம் வாழ்நாள் முழுவதும் பூமிக்கடியில் வாழும். இத்தவளைகள், ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப்பெருக்கம் செய்யும். சில நாட்களில் மீண்டும் பூமிக்குள் சென்று விடும்.

பரிந்துரை

பெரிய உடம்பு, சிறிய கால்கள், சிறிய தலை, உதடுகளை உடைய இந்த தவளை 170 கிராம் எடையும், 6 முதல் 9 செ.மீ. நீளமும் கொண்டது. பூமிக்கடியில் உள்ள புழு, பூச்சிகளை தன் நீண்ட நாக்கால் கவர்ந்து உணவாக்கி கொள்ளும். இதன் வாழ்க்கை முறை மர்மம் நிறைந்தது. முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், தமிழகத்தில் ஆனைமலை புலிகள் சரணாலய பகுதியில் இந்த இனம் காணப்பட்டது. மருத்துவ குணம் கொண்டது என கூறி இந்த ரக தவளை வேட்டையாடப்படுகிறது. ‘இண்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர்’ அமைப்பு, இந்த இனத்தை அழிந்து வரும் பட்டியலில் சேர்த்து உள்ளது. இந்த இன தவளைகளை பாதுகாக்க, மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை பரிந்துரைத்து உள்ளது.


Next Story