குடியுரிமை விண்ணப்ப அறிவிக்கைக்கும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு


குடியுரிமை விண்ணப்ப அறிவிக்கைக்கும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு
x
தினத்தந்தி 14 Jun 2021 8:34 PM GMT (Updated: 14 Jun 2021 9:25 PM GMT)

குடியுரிமை விண்ணப்ப அறிவிக்கைக்கும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தொடர்பில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உள்துறை அமைச்சகம் அறிவிக்கை
குஜராத், சத்தீஷ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வசிக்கும் அகதிகள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது.ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறலாம்.

தடை விதிக்க கோரிக்கை
குஜராத்தின் மோர்பி, ராஜ்கோட், படான், வதோதரா, சத்தீஷ்கரின் துர்க், பலோதபஜார், ராஜஸ்தானின் ஜலூர், உதய்ப்பூர், பாலி, பார்மர், சிரோகி, அரியானாவின் பரிதாபாத், பஞ்சாபின் ஜலந்தர் ஆகிய 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சககத்தின் அறிவிக்கை, குறுக்குவழியில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் வகையிலும், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அளித்த உறுதிமொழியை மீறும் வகையிலும் உள்ளது. எனவே இந்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

பிரமாண பத்திரம்
இந்த நிலையில், குடியுரிமை விண்ணப்ப அறிவிக்கைக்கும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தொடர்பில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குறிப்பிட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story