கர்நாடக ஆட்சி தலைமையில் எந்த குழப்பமும் இல்லை: எடியூரப்பா


கர்நாடக ஆட்சி தலைமையில் எந்த குழப்பமும் இல்லை: எடியூரப்பா
x
தினத்தந்தி 15 Jun 2021 9:20 PM GMT (Updated: 15 Jun 2021 9:20 PM GMT)

அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், கர்நாடக ஆட்சி தலைமையில் எந்த குழப்பமும் இல்லை என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

எடியூரப்பா பேட்டி
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற மந்திரி சி.பி.யோகேஷ்வர் உள்பட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் இன்று (புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் இந்த முதல்-மந்திரி மாற்றம் விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இத்தகைய நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

சந்தித்து பேச முடியும்
கர்நாடகத்தில் ஆட்சி தலைமை (எடியூரப்பா) மாற்றம் குறித்து எந்த குழப்பமும் இல்லை. கர்நாடகம் வரும் அருண்சிங்கிற்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். கட்சியில் ஒரு சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். அவர்களையும் 
அழைத்து அவர் பேசுவார். கட்சியில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். கட்சியில் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அது விரைவில் சரியாகிவிடும்.அருண்சிங் எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி., 
எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேச இருக்கிறார். குமரகிருபா விருந்தினர் மாளிகையில் தங்கும் அவரை எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யார் வேண்டுமானாலும் சந்தித்து பேச முடியும். கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் வருகிற 21-ந் தேதி காலை வரை அமலில் இருக்கும்.

கொரோனா பாதிப்பு
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story