18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 500 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு: மும்பை மாநகராட்சி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jun 2021 3:03 AM GMT (Updated: 16 Jun 2021 3:03 AM GMT)

21-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 500 மையங்களில் தடுப்பூசி போட மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

மும்பை, 

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தொடக்கத்தில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்பிறகு தடுப்பு மருந்து பற்றாக்குறை காரணமாக மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. மராட்டியத்தில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு 

வருகிறது.

இதற்கிடையே 1 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க மும்பை மாநகராட்சி உலகளாவிய டெண்டரும் விட்டு இருந்தது. ஆனால் இந்த டெண்டருக்கு அதிக வரவேற்பு இல்லை. இதனால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசே கொள்முதல் செய்து வருகிற 21-ந் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக சப்ளை செய்யும் என தெரிவித்தார். விருப்பம் உள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடவும் அனுமதி வழங்கப்பட்டது. பிரதமரின் இந்த அறிவிப்பை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் வரவேற்றனர். 


இந்தநிலையில் பிரதமரின் அறிவிப்பை அடுத்து, மும்பை மாநகராட்சி நகரில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாநகராட்சி தற்போது மும்பையில் உள்ள தடுப்பூசி மையங்களை 2 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. மும்பையில் தற்போது 259 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு நாளில் 31 ஆயிரத்துக்கும் மெற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியும்.

இந்த மையங்களை வருகிற 21-ந் தேதி முதல் 500 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளில் சுமார் 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story