இந்தியாவில் சட்டரீதியிலான பாதுகாப்பை இழக்கும் டுவிட்டர்


இந்தியாவில் சட்டரீதியிலான பாதுகாப்பை இழக்கும் டுவிட்டர்
x
தினத்தந்தி 16 Jun 2021 4:26 AM GMT (Updated: 2021-06-16T10:12:51+05:30)

இந்தியாவில் சட்டரீதியில் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன.  

இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது

புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்  என்பவை போன்ற பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்து வருகிறது. 

புதிய விதிகளை ஏற்கும் படியும் இல்லையே சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படியும் டுவிட்டர் நிறுவனத்திற்கு கடந்த 5-ம் தேதி மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது.

இந்த இறுதி எச்சரிக்கையை தொடர்ந்து இந்தியாவின் புதிய விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் கடந்த 7-ம் தேதி கோரிக்கை விடுத்தது. இதனால், சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் இதுவரை ஏற்கவில்லை.

இந்நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்ததால் சமூகவலைதளங்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் சட்டரீதியிலான பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சட்டரீதியிலான பாதுகாப்பை இழக்கும் பட்சத்தில் ’இடைநிலை தளம் (intermediary platform)’ என்ற அந்தஸ்தை டுவிட்டர் நிறுவனம் இழக்கிறது. இதன் மூலம் பயனாளர்களால் (மூன்றாம் நபர்கள்) டுவிட்டரில் பதிவிடப்படும் கருத்துக்களுக்கு டுவிட்டர் நிறுவனமும் பொறுப்பேற்ற வேண்டும். 

தங்கள் பயனாளர்களால் விதிகளுக்கு புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடப்படும் கருத்துக்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்து பதிவுகளுக்கும் அந்த பயனாளர்கள் மட்டுமின்றி இனி டுவிட்டர் நிறுவனமும் பொறுப்பு ஆகும். 

இதன் மூலம் சட்டரீதியிலான நடவடிக்கைகளையும் டுவிட்டர் நிறுவனம் இனி சந்திக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.   

புதிய விதிகளை பின்பற்ற மறுத்துவரும் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் சமூகவலைதளங்களுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் பாதுகாப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story