டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு


டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 Jun 2021 5:37 AM GMT (Updated: 16 Jun 2021 5:37 AM GMT)

டுவிட்டர் நிறுவனம் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி என்ற பகுதியில் கடந்த 5-ம் தேதி சஃபி அப்துல் சமத் என்ற முதியவர் 5-க்கும் மேற்பட்ட நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். 

முதியவர் தாக்கப்படுவது போன்ற வீடியோ டுவிட்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், சஃபிரை தாக்கிய நபர்கள் அவரை ’ஜெய் ஸ்ரீ ராம்’ என கூறச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூற மறுத்ததால் சஃபிரின் தாடியை மழித்ததாகவும் டுவிட்டர் வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல செய்தி நிறுவனங்களால் பகிரப்பட்டது.

ஆனால், இந்த தாக்குதல் மதரீதியில் நடத்தப்பட்டதாக பரவிவந்த தகவல்களை உத்தரபிரதேச போலீசார் மறுத்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் முன்விரோதம் காரணமாக மட்டுமே நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சஃபி அப்துல் மாந்திரிக செயல்களில் ஈடுபடக்கூடிவர் எனவும், தனது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி அதை போக்க உதவுமாறு சஃபிரிடம் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு மாந்திரிக (தாயத்து) டாலர் ஒன்றை கொடுத்த சஃபிர் குடும்ப பிரச்சினை குணமாகிவிடும் என கூறியுள்ளார்.

ஆனால், எதிர்பார்த்ததுபோல் பிரச்சினை சரியாகாததால் ஆத்திரமடைந்த அந்த சஃபி அப்துல் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்து மற்றும் முஸ்லீம் என இரு மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்தே சஃபி அப்துல் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த விவகாரத்தில் இதுவரை ஹாலோ, அடில் மற்றும் பர்வேஷ் என்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அஷ்ரப், முஷகித் மற்றும் போஃலி ஆகிய 3 பேர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களையும் விரைவில் கைது செய்வோம் என மாவட்ட எஸ்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சஃபி அப்துல் சம்த் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடைபெற்ற நிலையில் அதை மதரீதியிலான தாக்குதலாக சித்தரித்து டுவிட்டரில் பல்வேறு நபர்கள் கருத்து பதிவிட்டனர்.

தவறான கருத்துக்களுடன் சஃபி அப்துல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்களை உடனடியாக நீக்கும்படி உத்தரபிரதேச போலீசார் டுவிட்டர் நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

ஆனால், மதரீதியில் தாக்குதல் நடைபெற்றதாக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு சஃபி மீது தாக்குதல் நடைபெறுவது போன்ற வீடியோவை டுவிட்டர் நிறுவனம் நீக்கவில்லை. போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்து மத ரீதியிலான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் போலி மற்றும் தவறான பதிவுகளை நீக்க தவறியதாக டுவிட்டர் நிறுவனம் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சஃபி தாக்கப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்டு வேறு காரணத்திற்காக தாக்கப்பட்டவரை மத ரீதியில் தாக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துப்பதிவிட்டதாக அல்ட் செய்தி நிறுவன துணைத்தலைவர் முகமது சபீர், தி ஒயர் செய்தி நிறுவனம், ரானா அயப், மற்றும் டுவிட்டர் நிறுவனம் என மொத்தம் 7 பேர் மீது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிகளை பின்பற்ற மறுத்து இந்தியாவின் சட்டரீதியிலான பாதுகாப்பை இழந்துள்ள டுவிட்டர் நிறுவனம் மீது அதன் பயனாளர் பதிவிட்டுள்ள கருத்துக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story