நாகாலாந்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு


நாகாலாந்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 6:46 PM GMT (Updated: 16 Jun 2021 6:46 PM GMT)

நாகாலாந்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோஹிமா,

நாகாலாந்து மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 30 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. நாகாலாந்தில் இதுவரை 23,854 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என கருதிய அரசு ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது. இதற்கு முன்னதாக மாநிலம் முழுவதுமான ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 18 வரை அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதமானது சரிந்து வந்தாலும், முழுமையான கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் தொற்று வீதம் 5% க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்ட பின்னர் தான் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர அம்மாநிலத்தில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை விட, குணமடைந்தவர்கள் விகிதமானது உயர்வாக காணப்படுகிறது.

Next Story