கொரோனாவுக்கு எதிராக எடியூரப்பா அரசு சிறப்பாக செயல்படுகிறது: பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்


கொரோனாவுக்கு எதிராக எடியூரப்பா அரசு சிறப்பாக செயல்படுகிறது: பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்
x
தினத்தந்தி 17 Jun 2021 2:05 AM GMT (Updated: 17 Jun 2021 2:05 AM GMT)

கொரோனாவுக்கு எதிராக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு மட்டுமே கூறி வருகிறார்கள் என்றும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.

பதிலளிக்க மறுப்பு
கர்நாடக பா.ஜனதாவில் நிலவும் உட்கட்சி பிரச்சினை, முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் விவகாரம் குறித்து ஆலோசிக்க மேலிட பொறுப்பாளர் அருண்சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவுக்கு வந்துள்ளார்.
பெங்களூரு குமரகிருபா விருந்தினர் மாளிகையில் வைத்து முதல்-மந்திரி எடியூரப்பாவின் தலைமை மாற்றப்படுமா? என்று அருண்சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.

பின்னர் அருண்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அரசு சிறப்பாக செயல்படுகிறது
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை வளர்ப்பது குறித்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பிற தலைவர்களுடன் ஆலோசிக்க 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பெங்களூருவுக்கு வந்துள்ளேன். மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியை வளர்ப்பது, தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளேன். முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அரசு கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. மாநிலத்தில் கொரேனாா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக பணியாற்றுகிறார்கள்.
கொரோனா சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பாக செயல்பட்டு மக்கள் பணிகளை செய்து வருகிறார். கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கும் திட்டத்தை 
நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் முதல்-மந்திரி எடியூரப்பா கொண்டு வந்துள்ளார். கொரோனா சந்தர்ப்பத்தில் மக்களுக்காக செயல்படாமல், அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு மட்டுமே கூறி வருகிறார்கள். ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் வீட்டு தனிமையில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story