3 மாத அவகாசம் வழங்கியும் புதிய விதிகளை டுவிட்டர் பின்பற்றவில்லை - மத்திய மந்திரி குற்றச்சாட்டு


3 மாத அவகாசம் வழங்கியும் புதிய விதிகளை டுவிட்டர் பின்பற்றவில்லை - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Jun 2021 9:12 AM GMT (Updated: 2021-06-17T14:42:30+05:30)

புதிய விதிகளை பின்பற்ற 3 மாத காலம் அவகாசம் வழங்கியும் அதை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன. 

இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது.

புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் கீழ்படிதல் மற்றும் குறைதீர்த்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்  என்பவை போன்ற பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்து வந்தது. குறிப்பாக, கீழ்படிடல் மற்றும் குறைதீர்த்தல் அதிகாரியை நியமிக்காமல் டுவிட்டர் நிறுவனம் கால தாமதம் செய்து வந்தது.  

புதிய விதிகளை ஏற்கும் படியும் இல்லையே சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படியும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஆனால், புதிய விதிகளை ஏற்காததால் இந்தியாவில் சட்ட ரீதியிலான பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழந்துள்ளது.  

இதன் மூலம், டுவிட்டர் வலைதளத்தில் பயனாளர் பதிவிடும் கருத்துக்கு டுவிட்டர் நிறுவனமும் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சட்டரீதியிலான நடவடிக்கைகளையும் டுவிட்டர் நிறுவனம் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி, பல்வேறு விவகாரங்களில் டுவிட்டர் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டுவிட்டர் நிறுவனம் முதல்முறையாக வழக்குகளை சந்திக்க உள்ளது.

இந்நிலையில், 3 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளும் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று கூறுகையில், நாங்கள் அவர்களுக்கு (சமூக வலைதள நிறுவனங்கள்) 3 மாத கால அவகாசம் கொடுத்தோம். புதிய விதிகளை பிற நிறுவனங்கள் பின்பற்றிவருகின்றன. 

ஆனால், டுவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்றவில்லை. தகவல் தொழிநுட்ப சட்ட நெறிமுறை எண் 7-ஐ பின்பற்றவில்லை என்றால் விதி எண் 79-ன் கீழ் இந்தியாவில் சமூகவலைதளங்களுக்கு கிடைக்கும் சட்டரீதியிலான பாதுகாப்பை இழப்பீர்கள். அதுமட்டுமின்றி நாட்டின் தண்டனை சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களுக்கு பொறுப்பேற்பீர்கள்’ என்றார்.

Next Story