சோனியா காந்தியை நாளை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சோனியா காந்தியை நாளை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Jun 2021 5:24 PM GMT (Updated: 17 Jun 2021 5:24 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். 

டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அவரை டெல்லியின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்த  அவர், தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சரியாக மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் சென்றார்.

அவருடன் அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,   உள்ளிட்டோர் சென்றனர். 

தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு,  தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி தொகை குறித்து பிரதமரிடம் முதல்- அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 25 நிமிடங்கள் வரை  நடைபெற்றது.

இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

Next Story