டெல்லியில் மோடியுடன் சந்திப்பு: தமிழகத்துக்கு தேவையான அளவு தடுப்பூசி வழங்க மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்


டெல்லியில் மோடியுடன் சந்திப்பு: தமிழகத்துக்கு தேவையான அளவு தடுப்பூசி வழங்க மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jun 2021 11:51 PM GMT (Updated: 2021-06-18T05:53:54+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான அளவுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுடெல்லி, 

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். அவர், சென்னையில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றார்.

டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலினை டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதன்பின்னர் நரேந்திர மோடிக்கு, மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு நரேந்திர மோடியும் அவருக்கு பொன்னாடை அணிவித்து, தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மு.க.ஸ்டாலினும் அப்போது அவருக்கு நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர்.

அதன்பின்னர் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். நரேந்திர மோடி- மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஏறத்தாழ 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. எனது தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்திருக்கிறது. தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்பு முதல் தடவையாக தலைநகர் டெல்லிக்கு வந்திருக்கிறேன். பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியிருக்கிறேன்.

கொரோனா எனும் பெருந்தொற்று பெரியளவில் பரவி கொண்டிருந்த காரணத்தால், பதவியேற்ற உடனேயே என்னால் பிரதமரை வந்து சந்திக்க முடியவில்லை. நியாயமாக முன்கூட்டியே வந்து சந்தித்து இருக்க வேண்டும். ஆனாலும் அந்த வாய்ப்பை பெறமுடியவில்லை. தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் கொரோனா தொற்று குறைந்து கொண்டு வரும் நிலையில் இருக்கிறது. எனவே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டேன். அவரும் நேரம் ஒதுக்கி கொடுத்தார். அந்தவகையில் பிரதமரை சந்தித்தேன். பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக, மனநிறைவு தரும் சந்திப்பாக இருந்தது.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று கொண்டிருக்கும் எனக்கு முதலில் அவர் வாழ்த்துகளை கூறினார். நானும் அதற்கு நன்றி கூறினேன். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்ற வாக்குறுதியை அவர் எங்களுக்கு வழங்கினார். எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என வெளிப்படையாகவே அவர் கூறினார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களின் கோரிக்கைகளை முழுமையாக தயாரித்து அவரிடம் மனுவாக வழங்கியிருக்கிறோம். அதை முழுமையாக சொல்ல நேரமில்லை. எனவே சிலவற்றை மட்டுமே சொல்கிறேன்.

முக்கியமாக கூடுதலான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்கவேண்டும், செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களை மத்திய அரசு முழுமையாக வழங்கவேண்டும், ஜி.எஸ்.டி. வரி பாக்கியை முழுமையாக தமிழகத்துக்கு வழங்கவேண்டும், நீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை, நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளோம்.

காவிரி நீருக்கு தடையாக இருக்கக்கூடிய மேகதாது அணை திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்யவேண்டும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு, காவிரி-குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும், இலங்கை கடற்படையால் தொல்லைக்கு உள்ளாகி வரக்கூடிய தமிழக மீனவர்கள் இனி பாதிப்புக்குள்ளாகாதவாறு நிரந்தர தீர்வை காணவேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், புதிய மின்சார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்,

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை விரைவில் அமைக்கவேண்டும், கோவையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்கவேண்டும், மருத்துவக்கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தரப்பட வேண்டும், ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும், அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும், புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும், நாடு முழுவதும் இலவச-கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், ஈழத்தில் இருந்து அகதிகளாக வந்து தமிழகத்தில் வாழ்ந்து வருவோருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும், சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும், உலக பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறோம்.

இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதியின் அளவுகோலை மாநிலங்களே நிர்ணயித்து கொள்ளக்கூடிய உரிமையை தந்தாக வேண்டும், சேது சமுத்திர திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், பல்வேறு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மேம்பாட்டு திட்டங்கள், நாடாளுமன்றம்-சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், ரெயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும், குடியுரிமை திருத்த சட்டம், 3 வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடியிடம் மனுவாக அளித்திருக்கிறோம். சில செய்திகளை நேரிடையாக முக்கிய கருத்தாக சொல்லியிருக்கிறோம்.

இதில் பல பிரச்சினைகள் நேரிடையாக மத்திய அரசு சரிசெய்ய வேண்டியவை. இன்னும் பல பிரச்சினைகள் மாநில அரசான எங்களுக்கு அனுமதி அளித்து தீர்க்க வேண்டியவை. சில பிரச்சினைகள் மத்திய-மாநில அரசுகள் இணைந்து தீர்க்கப்பட வேண்டியவை ஆகும். எனவே மத்திய-மாநில அரசுகள் இணைந்து இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையை டெல்லி பயணம் எனக்கு கொடுத்திருக்கிறது என நம்புகிறேன். இந்த கோரிக்கைகளை ஒன்றொன்றாக நிறைவேற்ற மத்திய அரசுக்கு தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுப்போம். அப்படி அழுத்தம் கொடுக்கும்போது, தலைநகரில் உள்ள தமிழ் ஊடகங்களும் தமிழக மக்களுக்காக வாதாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பிரதமரிடம் நீங்கள் வழங்கிய கோரிக்கைகளில் பல கோரிக்கைகள் ஏற்கனவே தமிழக அரசால் பல தடவை முன்வைக்கப்பட்டவை தான். ஆனால் இவை இன்றளவிலும் நிறைவேற்றப்படவில்லை. இனி வரும் நாட்களில் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- இந்த கோரிக்கைகளை மனுவாக தந்தது மட்டுமல்ல, அதற்கான காரண காரியங்களையும் எடுத்து சொல்லியிருக்கிறோம். ‘நான் சம்பந்தப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுடன் கலந்துபேசி, நிச்சயம் நல்லமுடிவு எடுப்பேன். நம்பிக்கையுடன் இருங்கள்’, என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்திருக்கிறார். அந்த நம்பிக்கையுடன் தான் நாங்களும் இருக்கிறோம்.

கேள்வி:- மத்திய அரசுடன், தமிழக அரசு எந்த மாதிரியான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது?

பதில்:- ‘உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’, என்று எங்களை ஆளாக்கிய கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு எங்கள் நடைமுறை நிச்சயம் இருக்கும்.

கேள்வி:- 7 பேர் விடுதலையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அதுதொடர்பான கோப்பை ஏற்கனவே தமிழக கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதை நினைவூட்ட ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். இப்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அது போகும் போக்கை பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி:- தமிழகம் கேட்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு ஏன் வழங்க மறுக்கிறது?

பதில்:- தமிழகத்துக்கு போதுமான தடுப்பூசி இதுவரைக்கும் வழங்கவில்லை என்பது உண்மைதான். அதை மறுக்கவில்லை. அதுதொடர்பாகத்தான் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்தார். அவ்வப்போது தொலைபேசியில் பிரதமர், சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் பேசி வருகிறோம். அவர்களும் அவ்வப்போது தடுப்பூசிகளை அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுக்கு உள்ள கஷ்டங்களை சொல்கிறார்கள். இருந்தாலும் செங்கல்பட்டு, ஊட்டியில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலைகளை இயக்கினாலே பிரச்சினை இருக்காது என்ற கோரிக்கையையும் தொடர்ந்து வைத்துக்கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை மற்றும் முதியோருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.1,500 வழங்கும் திட்டங்கள் எப்போது தொடங்கப்படும்?

பதில்:- ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் ஆகிறது. எந்த அளவுக்கு தேர்தலின்போது அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றி வருகிறோம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். நிச்சயமாக தேர்தல் நேரத்தில் அளித்த உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம்.

கேள்வி:- மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத்தன்மை என்பது எப்போதும் வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- முறையாக கேட்கும் தடுப்பூசிகளை அவர்கள் கொடுத்தாலே, அந்த வெளிப்படைத்தன்மை வந்துவிடும். தடுப்பூசி பற்றாக்குறையை கூட சொல்லக்கூடாது என்று மத்திய அரசு கூறிவருகிறது. இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம். இதற்கு மேல் சொல்லவேண்டிய அவசியமில்லை.

கேள்வி:- ‘டாஸ்மாக்’ கடைகளை முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- ‘டாஸ்மாக்’ கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தான் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். கடந்த கால ஆட்சியில் எப்படி செய்தார்களோ, அதேபோலவே படிப்படியாக குறைக்கப்படும்.

கேள்வி:- முதல்-அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்து 24 மணி நேரமும் தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள். இதையெல்லாமே திட்டமிட்டு நடத்தி கொண்டிருக்கிறீர்களா?

பதில்:- ஒரே வரியில் சொல்கிறேன். எங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டும். அப்படி எங்கள் பணி இருக்கும். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Next Story