100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாறும்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாறும்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 18 Jun 2021 3:23 AM GMT (Updated: 2021-06-18T08:53:13+05:30)

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி திருவிழா
புதுவை மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2-வது கட்டமாக தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோவில் அரசு பெண்கள் 
மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் திருபுவனை எம்.எல்.ஏ. அங்காளன், சுகாதாரத்துறை செயலாளர் அருண், மாவட்ட கலெக்டர் பூர்வாகார்க், துணை 
கலெக்டர் கிரிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்வதில் சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தடுப்பூசி திருவிழாவில் நேற்று மட்டும் 13 ஆயிரம் பேர் தடுப்பூசி 
போட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும்.

உற்சாகம் குறையாமல்...
இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலம் புதுச்சேரி என்ற பெருமையை நாம் ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முடியும். எனவே மக்கள் 
அனைவரும் உற்சாகம் குறையாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுத்து தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது நீங்கள் எனக்கு அளிக்கும் வரவேற்பாக இருக்க முடியும். தடுப்பூசி திருவிழா வெற்றி பெற சிறப்பாக பணியாற்றிவரும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்று நட்டார்
இதனைதொடர்ந்து திருபுவனையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தை கவர்னர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். மேலும் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story