3 நாளில் ரூ.66,681 கோடி இழப்பு: ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்த அதானி


3 நாளில் ரூ.66,681 கோடி இழப்பு: ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்த அதானி
x
தினத்தந்தி 18 Jun 2021 5:24 AM GMT (Updated: 2021-06-18T10:54:09+05:30)

கவுதம் அதானி 3 நாளில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதனால், அவரது சொத்து மதிப்பு 63.5 பில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

மும்பை
 
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவிலும், ஆசியாவிலும் 2வது இடத்தைப் பிடித்தார். உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார் கவுதம் அதானி. 2021ஆம் ஆண்டில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 43.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
 
இந்த நிலையில் கவுதம் அதானியின் நிறுவன பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் 3 வெளிநாட்டுக் கணக்குகளை தேசிய பங்குகள் வைப்பு நிறுவனமான என்எஸ்டிஎல்  முடக்கியுள்ளதாக செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அதானி நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது.

இந்தச் செய்தி வெளியாகி கடந்த 3 நாட்களில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் கவுதம் அதானி 3 நாளில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதனால், அவரது சொத்து மதிப்பு 63.5 பில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. 
 
இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கும் இவருக்கும் இடையேயான இடைவெளி குறைவாக இருந்தது. ஆனால் இந்த சரிவின் காரணமாக இடைவெளி அதிகரித்தது மட்டுமல்லாமல், ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்னும் நிலையையும் அதானி இழந்திருக்கிறார். சர்வதேச அளவில் 15-வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறார். அதானியின் 2-ம் இடத்தை பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார்.
 
இதற்கிடையில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்படவில்லை என்றும் ஹோல்டு மட்டுமே செய்யப்பட்டு உள்ளதாகவும், இதைபதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர் எழுத்துப்பூர்வமாக மின்னஞ்சல் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story