காஷ்மீர் டிஜிபி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை


காஷ்மீர் டிஜிபி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை
x
தினத்தந்தி 18 Jun 2021 1:00 PM GMT (Updated: 18 Jun 2021 1:00 PM GMT)

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 

இந்த விவகாரத்தை தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் எடுத்து சென்று வரும் அந்த நாடு தற்போதும் ஐ.நா.வுக்கு இந்த பிரச்சினையை எடுத்து சென்றுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெறச்செய்யுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், காஷ்மீரில் போலி வீட்டு சான்றிதழ் உள்ளிட்டவை மூலம் பிராந்திய மக்கள் தொகை அமைப்பையே இந்தியா மாற்றுவதாக அதில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறுகையில், காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்த விவகாரத்தில் எந்த கேள்வியும் யதார்த்தத்தை மாற்ற முடியாது. இதைப்போல எல்லை தாண்டிய பயங்கரவாதமும் ஏற்க முடியாது. அதை நியாயப்படுத்தும் செயலும் ஏற்க முடியாது’ என்று உறுதிபட தெரிவித்தார்.

இந்நிலையில், காஷ்மீர் டிஜிபி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அமித்ஷா தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் அஜய் பஹால், தேசிய புலனாய்வு அமைப்பு இயக்குனர் அரவிந்த் குமார், ’ரா’ உளவு அமைப்பின் தலைவர் சமந்த் குமார் கோயல், சிஆர்பிஎஃப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) பொது இயக்குனர் குல்தீப் சிங் மற்றும் ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, இன்று மாலை உள்துறை அமைச்சகத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னரும் உயர் அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா இதுபோன்ற ஆலோசனை நடத்தினார். 

இதனால், பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நடத்தி வரும் ஆலோசனைக்கூட்டம் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story