கும்பமேளா: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு போலி கொரோனா பரிசோதனை - பகீர் தகவல்


கும்பமேளா: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு போலி கொரோனா பரிசோதனை - பகீர் தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2021 2:54 PM GMT (Updated: 18 Jun 2021 3:28 PM GMT)

கும்பமேளாவில் பங்கேற்றவர்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை போலியாக செய்யப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

டேராடூன், 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஒருமாதங்கள் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரிசோதனை செய்து ’கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே கும்பமேளாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரகாண்ட் அரசு அறிவித்தது. 

இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்து வைரஸ் இல்லை என்பதற்கான ’நெகட்டிவ்’ சான்றிதழ் உடன் வந்தவர்கள் கும்பமேளாவில் பங்கேற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 70 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதற்கிடையில், கும்பமேளாவில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சுமார் 2,600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைய கும்பமேளாவும் ஒரு காரணமாக அறியப்படுகிறது.

இந்நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் பலருக்கும் போலியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமலேயேயும், கொரோனா பரிசோதனை செய்தபோதும் போலியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லி, அரியானா மாநிலங்களை சேர்ந்த 22 தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் இந்த போலி கொரோனா பரிசோதனை செய்துள்ளன. கும்பமேளாவில் பங்கேற்பவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யமலேயே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியுள்ளனர். சுமார் 1 லட்சம் பேருக்கு போலியாக ’கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் வழங்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கும்பமேளாவில் பங்கேற்காதவர்களுக்கு போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அவர்கள் கும்பமேளாவில் பங்கேற்பதாக போலியாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. 

கும்பமேளாவில் பங்கேற்ற ஒரு நபரின் செல்போன் எண்ணுக்கு உங்களிடம் இருந்து கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முடிவு வெளியாகும் எனவும் குறுச்செய்தி வந்துள்ளது. ஆனால், அந்த நபர் கொரோனா பரிசோதனை செய்யவே இல்லை. இதனால், சந்தேகமடைந்த அந்த நபர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தனக்கு வந்த குறுச்செய்தி குறித்து புகார் அளித்தார்.

அந்த புகாரை தொடர்ந்து மாநில அரசு தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 22 தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் சுமார் 1 லட்சம் பேருக்க்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதலை போலியாக வழங்கியது தெரியவந்துள்ளது.

ஆனால், சுமார் 4 லட்சம் பேருக்கு போலி கோரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்பதற்காக போலி கொரோனா பரிசோதனை மற்றும் அதன்மூலம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை உத்தரகாண்ட் அரசு நியமித்துள்ளது. 22 தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

70 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளா நிகழ்ச்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாமலேயே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story