கருப்பு பூஞ்சைக்கான மருந்து உற்பத்தி 5 மடங்கு அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல்


கருப்பு பூஞ்சைக்கான மருந்து உற்பத்தி 5 மடங்கு அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2021 9:55 PM GMT (Updated: 2021-06-19T03:25:34+05:30)

கருப்பு பூஞ்சைக்கான மருந்து உற்பத்தி 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக மத்திய மந்திரி மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி மன்சுக் மண்டேவியா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களில், கடந்த 16-ந் தேதிப்படி, 27 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஆம்போடெரிசின்-பி மற்றும் இதர மருந்துகளின் இருப்பை உயர்த்த மத்திய அரசு தயாராகி வருகிறது.

உள்நாட்டில் ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்தி 5 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்த மருந்தில் 62 ஆயிரம் குப்பிகள்தான் தயாரிக்கப்பட்டன. ஆனால், இந்த மாத உற்பத்தி 3 லட்சத்து 75 ஆயிரம் குப்பிகளை தாண்டி விடும்.

இதுதவிர, 9 லட்சத்து 5 ஆயிரம் மருந்து குப்பிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு ‘ஆர்டர்’ போட்டுள்ளது. ஆம்போடெரிசின்-பி மருந்து கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு எந்த வாய்ப்பையும் விட்டு விடாது. மாநிலங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு இதுவரை 7 லட்சத்து 28 ஆயிரத்து 45 ஆம்போடெரிசின் குப்பிகளை அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story