நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு டுவிட்டர் அதிகாரிகள் ஆஜர்


நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு டுவிட்டர் அதிகாரிகள் ஆஜர்
x
தினத்தந்தி 18 Jun 2021 10:07 PM GMT (Updated: 2021-06-19T03:37:47+05:30)

டுவிட்டர் நிறுவனம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசுடன் கடந்த சில மாதங்களாக மோதலில் ஈடுபட்டு உள்ளது.

புதுடெல்லி, 

டுவிட்டர் நிறுவனம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசுடன் கடந்த சில மாதங்களாக மோதலில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்தது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கு மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் கணக்குகளில் இருந்து நீல நிற ‘டிக்’ நீக்கப்பட்டது, டூல்கிட் விவகாரம் என பல பிரச்சினைகளில் இந்த மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் டுவிட்டர் தளத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் பயனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான இந்த குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டுவிட்டர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான பொதுக்கொள்கை மேலாளர் சகுப்தா காம்ரன், சட்ட கவுன்சில் ஆயுஷி கபூர் ஆகியோர் நேற்று இந்த நிலைக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

Next Story