சகோதரத்துவத்தின் அடிப்படையில் காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டும்: குமாரசாமி


சகோதரத்துவத்தின் அடிப்படையில் காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டும்: குமாரசாமி
x
தினத்தந்தி 19 Jun 2021 1:41 AM GMT (Updated: 19 Jun 2021 1:41 AM GMT)

சகோதரத்துவத்தின் அடிப்படையில் காவிரி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நாம் சண்டை போடக்கூடாது என்றும் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தீங்கு விளைவிக்க கூடியது
மேகதாது திட்டம் மற்றும் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கர்நாடகத்தின் நலன்களுகு்கு தீங்கு விளைவிக்க கூடியது. இந்த விஷயங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கர்நாடக அரசு, ஆளுங்கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்களால் செயல் இழந்து உள்ளது. உட்கட்சி மோதல்களில் பலவீனம் அடைந்துள்ள பா.ஜனதா அரசிடம், நீர், நிலம், மொழி பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?. பிரதமரை சந்தித்து பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் நடப்பு ஆண்டிற்கான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு உடனடியாக உரிய பதிலளிக்க வேண்டிய கர்நாடக அரசு, தனது கடமையை மறந்துவிட்டது.

துணிச்சலுடன் செயல்பட்டோம்
மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதில் 2 தேசிய கட்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த திட்டத்தை செயல்படுத்த துணிச்சலுடன் செயல்பட்டோம். ஆனால் தற்போது உள்ள பா.ஜனதா ஆட்சியால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும், அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி இருந்தால், கர்நாடகத்தில் சொர்க்கத்தை உருவாக்க முடியும் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது.தமிழ்நாட்டில் மாநில கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது என்பதை கர்நாடக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மாநிலத்தின் 
பெருமைமிக்க விஷயங்களில் தமிழ்நாடு பலமாக உள்ளது. அண்டை மாநிலங்களை போல் அல்லாமல் கர்நாடகம் தேசிய கட்சிகளின் பிடியில் சிக்கியுள்ளது. தேசிய கட்சிகள் ஆட்சியில் கர்நாடகத்தின் நலன் காக்கப்படவில்லை. மாநில கட்சியால் மட்டுமே நமது மாநிலத்தின் நலன் காக்க முடியும் என்பதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

காவிரி பிரச்சினை
அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக ஆக்க தான் முயற்சி மேற்கொள்ளப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் நான் அவருடன் கைகோர்க்க தயாராக உள்ளேன். இந்த விஷயத்தில் இரு மாநிலங்களும் சகோதரர்களாக செயல்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களும் சண்டை போட்டுக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. அதனால் காவிரி பிரச்சினையில் நாம் ஒன்றாக சேர்ந்து கர்நாடகம்-தமிழகம் மோதல் போக்குக்கு முடிவுகட்ட வேண்டும். தென்இந்தியா மாநிலங்களாக இருந்து கொண்டு நாம் சண்டை போடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சகோதரத்துவத்தின் அடிப்படையில் காவிரி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இதை மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இருந்து தொடங்கலாம். இத்தகைய முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு. தற்போதைய சூழ்நிலையில் இரு மாநிலங்களின் சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story