உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பட்டியலில் கோவேக்சின் சேருமா? விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்பு


உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பட்டியலில் கோவேக்சின் சேருமா? விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 2:28 AM GMT (Updated: 19 Jun 2021 2:28 AM GMT)

உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சின் இடம் பிடிப்பதற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

ஐதராபாத், 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய ஓராண்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கி சாதித்தது. கோவேக்சின் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, தற்போது நமது நாட்டில் அவசர கால பயன்பாட்டு ஒப்புதலை பெற்று விட்டது. இதனால் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் பயன்பாட்டில் உள்ளது.அதே நேரத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் எப்.டி.ஏ., அமெரிக்காவில் கோவேக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை தர மறுத்துவிட்டது. நிரந்தர பயன்பாட்டு உரிமத்துக்கு கூடுதல் தரவுகளை அனுப்புமாறு அது கூறி விட்டது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் (இ.யு.எல்.) கோவேக்சின் இடம்பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த அங்கீகாரம் கிடைத்தால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியும், மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகமெங்கும் அவசரகால பயன்பாட்டுக்கு வழிபிறக்கும்.

இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த தடுப்பூசி தொடர்பான முழுமையான ஆய்வு கூட்டத்துக்கு முந்தைய முதல் கட்ட கூட்டத்தை வரும் 23-ந்தேதி நடத்தவும் உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.

இந்த கூட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி பற்றிய விரிவான விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பு இருக்காது. இருந்தபோதிலும், அதன் ஒட்டுமொத்த தரம் பற்றிய சுருக்க அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே, கோவேக்சின் தடுப்பூசியானது, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் ஜூலை-செப்டம்பரில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த மாதம் கூறியது.

உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சின் தடுப்பூசி இடம்பிடிப்பதற்கு 90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்து விட்டதாக மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியது.

எஞ்சிய ஆவணங்களை இந்த மாதத்திற்குள் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிப்பதாகவும் மத்திய அரசிடம் பாரத் பயோடெக் கூறி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாடு பட்டியலில் கோவேக்சின் இடம் பிடித்துவிட்டால் அது ஒரு சர்வதேச அங்கீகாரம் ஆகும்.

உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கியுள்ள தடுப்பூசியும் (இந்தியாவில் இது கோவிஷீல்டு), பைசரும் பயோ என்டெக்கும் இணைந்து கண்டுபிடித்துள்ள தடுப்பூசியும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story