கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு


கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி:  ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Jun 2021 5:25 AM GMT (Updated: 19 Jun 2021 5:25 AM GMT)

கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

பாஜக எம்.பி.க்கள், மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசுகையில் , “கொரோனா வைரஸுக்கு எதிராக மிக தீவிரமாகப் போரிட்டு வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றன. ஊரடங்கு அமல் செய்யப்பட்டால், ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஊரடங்கு அமல் செய்யப்படாவிட்டால், கொரோனா வைரஸ் பரவுவதாக புகார் கூறுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தடுப்பூசி திட்டத்தைக்கூட எதிர்க் கட்சி தலைவர்கள் விட்டு வைக்கவில்லை. தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையான தகவல்களை பரப்பி வருகின்றனர். தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் நிணநீர் இருப்பதாக கூறுகின்றனர். தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.மத்தியில் ஆளும்  அரசு, மக்களுக்கு சேவையாற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க சதி செய்து வருகின்றன” என்றார். 


Next Story