சுவேந்து அதிகாரிக்கு எதிரான மனு: விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் ;வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் - மம்தா பானர்ஜி


சுவேந்து அதிகாரிக்கு எதிரான மனு: விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் ;வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 19 Jun 2021 5:42 AM GMT (Updated: 19 Jun 2021 5:42 AM GMT)

சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்து உள்ளார்.


கொல்கத்தா
 
அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. எனினும், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.
 
இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில்  மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நந்திகிராம் தொகுதியில் பணப்பட்டுவாடா, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா ஐகோர்ட்  நீதிபதி கவுசிக் சந்தா முன்பு வந்தது. அப்போது, ‘இது தேர்தல் தொடர்பான மனு என்பதால் முதல் நாள் விசாரணையில் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்’’ என நீதிபதி கூறினார். இதனை மம்தாவின் வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். தவிர, தோல்வியுற்ற மேலும் 4 திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷுடன் நீதிபதி கவுசிக் சந்தா  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  இரண்டு புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) வெளியிட்டு இருந்தது.

மேலும் அதில் நீதிபதி கவுசிக் சந்தா பா.ஜ.க. தலைவருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார். ஆச்சரியப்படத்தக்க வகையில், அவர்  நந்திகிராம் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதியும் ஆவார். இந்திய நீதித்துறை அமைப்பு நாளுக்கு நாள் இருண்டு வருதால் இந்த வழக்கில் நீதி கிடைக்குமா? என காலம் தான் பதில் சொல்லும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபோல் திரிணாமுல் கட்சி எம்.பி. டெரெக் ஓ’பிரையன் “கொல்கத்தா ஐகோர்ட்டில்  பா.ஜ.க.வுக்காக நீதிபதி கவுசிக் சந்தா ஆஜரான விஷயங்கள்” என்ற பட்டியலையும் டுவீட் செய்துள்ளார். அவர் 2012-2014 முதல் 10 வழக்குகளை பட்டியலிட்டு உள்ளார். . “இப்போது அவர் நந்திகிராம் தேர்தல் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இது ஒரு  தற்செயலாக இருக்கலாம் ? "நீதித்துறை  மூழ்க முடியுமா?" என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் ஆலோசகர் சஞ்சய் பாசு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டலுக்கு எழுதிய கடிதத்தில், கூறியதாவது: “எனது கடசிக்காரர் பா.ஜ.க. உறுப்பினரான சுவேந்து அதிகாரியை வெற்றியை  எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்; தேர்தல் மனுவின் தீர்ப்பு அரசியல் ரீதியான மாற்றத்தையும் கொண்டிருக்கும்.  நீதிபதி கவுசிக் சந்தா பா.ஜ.க.வின் தீவிர உறுப்பினராக இருந்தார் என்பது எனது கட்சிகாரருக்கு தெரியவந்துள்ளது. ஆகவே,  நீதிபதி தேர்தல் மனுவை எடுத்துக் கொண்டால், பதிலளித்தவருக்கு ஆதரவாகவும் / அல்லது எனது கட்சிகாரருக்கு  எதிராகவும்  நீதிபதியின் முடிவு இருக்கலாம்  எனது கட்சிகாரரின் மனதில் ஒரு நியாயமான பயம் இருக்கும். ”

"நீதிபதி கவுசிக் சந்தா இன்னும் நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்படவில்லை ...  நீதிபதி கவுசிக் சந்தாவை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தினா  எனது கட்சிகாரரின் கருத்துக்கள் தலைமை நீதிபதியால் கேடக்கப்படவேண்டும்.

அத்தகைய உறுதிப்படுத்தலுக்கு எனது கட்சிகாரர் தனது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருக்கிறார். நீதிபதி தனது ஆட்சேபனைகளை அறிந்திருப்பதாக எனது கட்சிக்காரர் கருதுகிறார், மேலும் எனது கட்சிக்காரர் நீதிபதியின் சார்பாக ஒரு சார்புடைய முடிவு எடுக்க  வாய்ப்பு இருப்பதாக நியாயமாகக் கருதுகிறார் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷிடம்   நீதிபதி சாந்தா ஒரு பா.ஜ.க உறுப்பினரா என்று கேட்டதற்கு, கோஷ்  “நிச்சயமாக இல்லை” என்றார். எவ்வாறாயினும், அவர் ஒரு நீதிபதியாக வருவதற்கு முன்பு, கட்சியின் சட்ட செல் திட்டங்களில் கலந்து கொண்டதாகவும், கட்சிக்காக ஐகோர்டில் ஆஜராகி இருக்கலாம் என்றும் கோஷ் ஒப்புக் கொண்டார். புகைப்படங்கள் அநேகமாக “2015 ஆம் ஆண்டிற்குள்” இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார். "அதில் என்ன தவறு," என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story