காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி 24-ந் தேதி ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jun 2021 8:20 PM GMT (Updated: 19 Jun 2021 8:20 PM GMT)

சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து காஷ்மீர் தலைவர்களுடன், பிரதமர் மோடி 24-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி, 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு -- காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டசபையை உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும், மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி காஷ்மீரில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.

இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் 24-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.

இவர்களில், முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் அடங்குவர். 14 தலைவர்களும் கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

Next Story