சி.பி.எஸ்.இ. கம்பார்ட்மெண்ட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 1152 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jun 2021 8:42 PM GMT (Updated: 19 Jun 2021 8:42 PM GMT)

சி.பி.எஸ்.இ. கம்பார்ட்மெண்ட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 1152 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, டெல்லியைச் சேர்ந்த மம்தா சர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 18-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு முறைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.

மதிப்பெண்களில் திருத்தம் கோரி மாணவர்கள் முறையிடும் பட்சத்தில் அதற்கான குறை தீர்ப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். தேர்வு முடிவுகள், விருப்பத்தேர்வுக்கான தேதி ஆகியவற்றை உள்ளடக்கி இறுதி செயல் திட்டத்தை சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21-ந் தேதிக்குத் தள்ளிவைத்தது.

இந்தநிலையில், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 வகுப்புக்கான கம்பார்ட்மெண்ட், தனித் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 10, பிளஸ் 2 வகுப்புகளைச் சேர்ந்த ஆயிரத்து 152 மாணவர்கள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கமான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு முறையை உருவாக்கியதைப் போல, கம்பார்ட்மெண்ட், தனித்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கும் உருவாக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர்.

Next Story