பாலக்காடு மாவட்டத்தில் பலத்த மழை: மங்கலம் அணை திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


பாலக்காடு மாவட்டத்தில் பலத்த மழை: மங்கலம் அணை திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2021 10:50 PM GMT (Updated: 19 Jun 2021 10:50 PM GMT)

பாலக்காடு மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து மங்கலம் அணை திறக்கப்பட்டு உள்ளது.

பாலக்காடு,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி மங்கலம் ஆற்றின் துணை ஆறான செருகுன்னபுழா ஆற்றின் குறுக்கே ஆலத்தூர் தாலுகாவில் கட்டப்பட்டு உள்ள மங்கலம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி மங்கலம் அணையில் 71 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. பின்னர் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று நீர்மட்டம் 72.64 அடியாக உயர்ந்தது. 

ஒரே நாளில் 1.64 அடி நீர்மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மங்கலம் அணையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மங்கலம் அணையை அதிகாரிகள் திறந்து விட்டனர். 

அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கையாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Next Story