சுயநல அரசியலை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் காங்கிரசுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 Jun 2021 11:09 PM GMT (Updated: 2021-06-20T04:39:10+05:30)

கொரோனா காலத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் தேர்தல் பலப்பரீட்சை பற்றி பேசும் சுயநல அரசியலை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரசுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.

மும்பை, 
கொரோனா காலத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் தேர்தல் பலப்பரீட்சை பற்றி பேசும் சுயநல அரசியலை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரசுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார். 
காங்கிரஸ் கருத்து 
 மராட்டியத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி உறவை முறித்து கொண்ட சிவசேனா, தனது கொள்கைக்கு முரண்படான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. 
இந்த நிலையில் வரும் தேர்தல்களை தனித்து சந்திப்போம் என காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே கூறி வருகிறார். மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் மாவட்ட தலைவர் பாய் ஜக்தாப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்தால், வரும் தேர்தல்களை நாங்கள் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து சந்திப்போம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். 
உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
இதற்கு மத்தியில் சிவசேனாவின் 55-வது ஆண்டு நிறுவன நாளையொட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று பேசினார். அப்போது அவர் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியதாவது:-
 சிலர் தங்களது சொந்த பலம் பற்றி பேசி வருகின்றனர். நாங்களும் அதுேபால பேச முடியும். நீங்கள் சொந்த பலம் என்று  எதை சொல்கிறீர்கள்?. கண்டிப்பாக அது முக்கியம் தான், தேவையும் தான். ஆனால் தேர்தலுடன் மட்டும் அதை குறுக்கிவிட முடியாது. மும்பை மற்றும் மராட்டியத்தில் மராத்தி பேசும் மக்களுக்கு சிவசேனா செய்தது போல, நீதி கேட்பதிலும் இருக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்திற்காக பலவீனமாகவோ அல்லது தேவையின்றி மற்றவர்களின் சுமையையும் தூக்கி சுமக்க மாட்டோம். சொந்த கால்களில் பெருமிதத்துடன் நடப்போம். அதுவே எங்களின் குறிக்கோள்.
தேர்தல் பற்றி பேசுவது சரியல்ல
பொது மக்கள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். நிதி பிரச்சினையில் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் தேர்தலை தனித்து சந்திப்போம் என்று பலப்பரீட்சை பற்றி பேசுவது சரியானது அல்ல. தற்போது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தனித்து போட்டியிடுவது பற்றி பேசினால், மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள். தேர்தலில் தனித்து போட்டியிடுவது போன்ற கட்சியை மையப்படுத்திய நமது ஆசைகளுக்கு பொது மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள். மக்கள் நம்மை தோற்கடிப்பார்கள். 
பொது மக்கள் சாலைகளில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும்போது, நமது சொந்த பலத்தை காட்டுவதில் என்ன பயன்? நாம் இந்த ஆட்சி அதிகாரத்தை எப்படி பயன்படுத்த போகிறோம்? தேர்தல் நேர மனநிலையை விட்டுவிட்டு நாம் இந்த பெருந்தொற்றுக்கு எதிராக போராட வேண்டும்.
இந்துத்துவாவின் காப்புரிமை
நாட்டின் கூட்டாட்சி முறை சிறப்பானது. தங்களின் பிராந்திய பெருமையை நிலைநாட்டிய மேற்குவங்க வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள். மகாவிகாஸ் கூட்டணி அமைந்ததால், நாங்கள் இந்துதுவாவில் இருந்து விலகி விட்டதாக சிலர் பார்க்கின்றனர். இந்துதுவாவின் காப்புரிமை யாரிடமும் இல்லை.  இந்துதுவா தான் எங்களின் தேசியம். அது எப்போதும் எங்களின் மனதில் நிலைத்திருக்கும். அரசியல் வெற்றி வேண்டுமா, அல்லது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க தீர்வு காண வேண்டுமா என்பதை முடிவு செய்ய எல்லா கட்சிகளுக்கு நேரம் வந்துவிட்டது. 
நாடு சமூக சீரழிவை நோக்கி சென்று கொண்டு இருப்பது நிச்சயம். எனவே மக்களின் பிரச்சினை தீர்க்க வேண்டுமா அல்லது ஆட்சி அதிகாரம் வேண்டுமா என்பதை முடிவு செய்யும் நேரமும் கட்சிகளுக்கு வந்துவிட்டது. நம் முன்னால் உள்ள பொருளாதார, சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு வழி சொல்லாமல், நாம் அரசியல் செய்தால் அது பெரிய பிரச்சினைகளை தரும்.
இப்படிப்பட்ட சுயநல அரசியலை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். 

Next Story