மேகதாது திட்டத்திற்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி: குமாரசாமி வலியுறுத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jun 2021 8:11 PM GMT (Updated: 20 Jun 2021 8:11 PM GMT)

மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை விரைவாக வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

மேகதாது திட்டத்தை செயல்படுத்த நான் முதல்-மந்திரியாக இருந்தபோது துணிச்சலாக நடவடிக்கை எடுத்தேன் என்றும், மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை விரைவாக வழங்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேகதாது திட்டத்திற்கு கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று நான் பிரதமருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தேன் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் அவரது அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லையா?. ஒருவேளை அந்த அழுத்தத்திற்கு பணிந்து மத்திய அரசு அனுமதி வழங்குவதை தள்ளிப்போட்டு இருந்தால் அது கன்னடர்களுக்கு செய்த துரோகம்.

மேகதாது திட்டத்தை செயல்படுத்த நான் முதல்-மந்திரியாக இருந்தபோது துணிச்சலாக நடவடிக்கை எடுத்தேன். மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கேட்டு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தோம். ஆனால் அதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இன்னொருபுறம் மேகதாது திட்டத்திற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. இதை பார்க்கும்போது மேகதாது திட்டத்தை தடுக்க மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் கூட்டு சேர்ந்து சதி செய்ததா? என்ற சந்தேகம் எழுகிறது.

மேகதாது திட்ட விஷயத்தில் தமிழ்நாடு அழுத்தம் கொடுத்ததா?, அதனால் திட்டத்திற்கு அனுமதி வழங்க தாமதப்படுத்தப்பட்டதா? என்பது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் இதற்கு பிரதமரிடம் பதில் கேட்டு பெற வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை விரைவாக அனுமதி வழங்க வேண்டும்” என்று குமாரசாமி பதிவிட்டுள்ளார்.

Next Story