கால்நடைகளை திருடிச் சென்றதாக சந்தேகத்தில் திரிபுராவில் 3 பேர் அடித்துக்கொலை


கால்நடைகளை திருடிச் சென்றதாக சந்தேகத்தில் திரிபுராவில் 3 பேர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2021 8:58 PM GMT (Updated: 2021-06-21T02:28:43+05:30)

கால்நடைகள் திருடிச் செல்லப்படுவதாக அவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த வாகனத்தை துரத்திச் சென்றனர்.

அகர்தலா, 

திரிபுரா மாநிலம் கொவை மாவட்டம் நமாஞ்சோய்போரா கிராமம் வழியாக நேற்று அதிகாலை ஒரு சிறிய சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அதில் 5 கால்நடைகள் கொண்டு செல்லப்படுவதை அந்த கிராம மக்கள் பார்த்தனர்.

கால்நடைகள் திருடிச் செல்லப்படுவதாக அவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த வாகனத்தை துரத்திச் சென்றனர். பக்கத்து கிராமத்தில் வைத்து அதை மடக்கினர்.

வாகனத்தில் இருந்த 3 பேரை கீழே இழுத்துப்போட்டு அடித்து உதைத்தனர். கூரிய ஆயுதங்களையும் பயன்படுத்தினர். 2 பேர் மயங்கி சரிந்தநிலையில், ஒருவர் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து தாக்கினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், தாக்கப்பட்ட 3 பேரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யாரும் கைது செய்யப்படவில்லை.

அடித்துக் கொல்லப்பட்டவர்கள் பெயர்கள் ஜயீத் உசைன் (வயது 30), பிலால் மியா (28), சைபுல் இஸ்லாம் (18) என்றும், செபாகிஜலா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

Next Story