ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகி தபு மிஷ்ரா மரணம்: முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இரங்கல்


ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகி தபு மிஷ்ரா மரணம்: முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இரங்கல்
x
தினத்தந்தி 20 Jun 2021 9:07 PM GMT (Updated: 2021-06-21T02:37:24+05:30)

ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகி தபு மிஷ்ரா மறைவிற்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புவனேசுவரம், 

ஒடிசாவில் புகழ் பெற்ற சினிமா பின்னணி பாடகியாக வலம் வந்தவர், தபு மிஷ்ரா (வயது 36). இவர் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து, மீண்ட நிலையில் அதற்கு பிந்தைய பாதிப்புகளால் புவனேசுவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 19-ந் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசமாகி வந்தது. அவருடைய ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்ததால், 2 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது நுரையீரல் மிகவும் சேதம் அடைந்தது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார்.

அவரை கொல்கத்தாவுக்கு கொண்டு சென்று எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்து, அதற்காக மாநில அரசு ரூ.1 லட்சம் நிதியை அனுமதித்தது. ஒடிசாவில் உள்ள திரைப்பட துறையினரும் அவருடைய சிகிச்சைக்காக நிதி திரட்டத்தொடங்கினர். இந்த நிலையில்தான் அவர் மரணம் அடைந்துள்ளார்.

‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்தியவர், மீளாத்துயில் கொண்டு விட்டார்.

அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “பிரபல ஒடியா பாடகி தபு மரணம் அடைந்தது குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். ஒடிசா இசை உலகில் ஒரு பாடகியாக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.

தபு மிஷ்ராவின் தந்தை கடந்த மாதம் 10-ந் தேதி கொரோனாவுக்கு பலியான நிலையில், தபு மிஷ்ராவும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் இறந்திருப்பது அவர்களுடைய குடும்பத்தை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story