காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்து மோடி நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மெகபூபா ஆலோசனை


காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்து மோடி நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மெகபூபா ஆலோசனை
x
தினத்தந்தி 21 Jun 2021 12:37 AM GMT (Updated: 21 Jun 2021 12:37 AM GMT)

காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

இதில் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் விளங்குகிறது. அதேநேரம் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை. எனினும் 2 யூனியன் பிரதேசங்களும் தற்போது துணைநிலை கவர்னர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

அதன்படி வருகிற 24-ந் தேதி டெல்லியில் தனது வீட்டில் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான செயல்திட்டம் உருவாக்கப்படும் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீரை சேர்ந்த 14 அரசியல் கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தின் முதல்-மந்திரிகளாக இருந்த 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

14 கட்சிகளில் முக்கியமாக, தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதா, காங்கிரஸ், காஷ்மீர் அப்னி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மக்களின் மாநாடு, காஷ்மீர் தேசிய பாந்தர் கட்சி உள்ளிட்டவற்றின் நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளாா்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் முதல் முறையாக பிரதமர் மோடி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அந்தந்த கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன.

அந்தவகையில் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் விவகாரக்குழு நேற்று ஸ்ரீநகரில் உள்ள மெகபூபாவின் வீட்டில் கூடி விவாதித்தது. மெகபூபா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாநில நலன்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், டெல்லியில் பிரதமர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க மெகபூபாவுக்கே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை கட்சியின் செய்தி தொடர்பாளர் சையத் சுகைல் புகாரி, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைப்போல குப்கர் பிரகடனத்துக்கான மக்களின் கூட்டணி நாளை (செவ்வாய்க்கிழமை) கூடி இது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story