திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2021 2:53 AM GMT (Updated: 21 Jun 2021 2:53 AM GMT)

திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்காகத் திரட்டிய நிதியில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரவலால் 500 கோவில்களை கட்ட முடியவில்லை. கோவில்களின் கட்டுமானப் பணிகளை வரும் ஆண்டில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஏழுமலையான் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியை தொடங்கி வைத்துள்ளோம். அந்தக் கட்டுமானப் பணியை இன்னும் 18 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளோம். வட இந்தியாவில் மிகப்பெரிய கோவிலாக ஜம்மு-காஷ்மீர் கோவிலை கட்ட முடிவு செய்துள்ளோம். மும்பை, வாரணாசி ஆகிய ஊர்களில் ஏழுமலையான் கோவில்கள் கட்டப்படும்.

திருமலை கிரீன்ஹில்ஸ் என அறிவிக்கப்பட்டதும் விரைவில் மின்சார பேட்டரி பஸ்கள் இயக்கப்படும். 100 மின்சார பஸ்களை புதிதாக வாங்க முதல்-மந்திரி அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயங்கும் தனியார் வாகனங்களின் உரிமையாளர்கள் திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்பு கொண்டால் வங்கிகள் மூலம் கடன் வழங்கி, அதில் பேட்டரி வாகனங்களை வாங்க பரிந்துரை செய்யப்படும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story