இன்று பிற்பகல் 3 மணி வரை ஒரே நாளில் 47.5 லட்ச தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 21 Jun 2021 10:57 AM GMT (Updated: 21 Jun 2021 10:57 AM GMT)

இன்று பிற்பகல் 3 மணி வரை ஒரே நாளில் 47.5 லட்ச கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை ; உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா முன்னிலை வகிக்கிறது.

புதுடெல்லி

உலகளவில் இதுவரை 262 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஒட்டு மாத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நூறு பேரில் 34 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

உலக நாடுகளின் அரசால் அளிக்கப்படும் புள்ளி விவரங்களைத் திரட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கண்டங்கள், நாடுகள் என பல பகுதியாகப் பிரிக்கப்பட்டு, இந்த தடுப்பூசி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆப்ரிக்க கண்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மற்ற கண்டங்களைக் காட்டிலும் மிக மெதுவாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய அளவிலான முகாம்கள் தொடங்காமலேயே உள்ளன.

ஒட்டுமொத்தமாக இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில், மிக பணக்கார நாடுகள் முதல் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்த 86 சதவீதம் பேருக்கும், ஏழை நாடுகளைச் சேர்ந்த 0.3 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை  262 கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 27,09,08,312 அதாவது 27 கோடிப் பேர் இந்தியர்கள்.

இந்தியாவில் நூறு பேரில் 20 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொணடுள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 16 சதவீதமாகவும், இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 3.6 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள்தான். அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 28 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை கிடைத்த தகவல்படி, 38,24,408 அமர்வுகள் மூலம் மொத்தம் 28,00,36,898 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,39,996 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் இன்று , மாலை 3 மணி வரை 47.5 லட்சம்  தடுப்பூசிகள் வழங்கியதன் மூலம் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்  ஒரு மைல்கல்லை தாண்டியது.

பா.ஜனதா  ஆளும் ஐந்து மாநிலங்களான மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் அரியானா ஆகியவை சிறப்பு தடுப்பூசி  முகாம்கள் நடத்தி இதில்  முன்னிலை வகித்தன.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த தினசரி தடுப்பூசி இலக்கு  43 லட்சம் ஆகும். ஜூன் 14 அன்று 38.2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர்  நாட்டில் தினசரி தடுப்பூசி அளவு முதல் முறையாக இன்று  50 லட்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய தடுப்பூசி கொள்கையின்படி  ஆகஸ்ட் முதல் தினசரி ஒரு கோடி தடுப்பூசிகளை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி சுகாதாரப் பணியாளர்களுக்காக தொடங்கியது. இது பிப்ரவரியில் மேலும் விரிவாக்கப்பட்ட.

இரண்டாம் கட்ட தடுப்பூசி மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த கட்டத்தில் இலக்கு வைக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 27 கோடியாக இருந்தது.

மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பு  திட்டத்தின் படி, மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 1 ஆம் தேதி 45+ மக்கள் தொகைக்கு அல்லது 34.51 கோடி மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Next Story