மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முடிவு


மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முடிவு
x
தினத்தந்தி 22 Jun 2021 9:51 AM GMT (Updated: 2021-06-22T15:21:54+05:30)

பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து 2-வது முறையாக இன்று குப்கார் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 காஷ்மீரில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் 24-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது.   தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.  இந்தக் கூட்டத்தில்  பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அண்மையில் அழைப்பு விடுத்தது.

இவர்களில், முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் அடங்குவர். 14 தலைவர்களும் கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு கூறியுள்ளது. 

இந்தக்கூட்டத்தில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க குப்கார் கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக வலியுறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. 

Next Story