காஷ்மீரை சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் மோடி அழைப்பை ஏற்றனர்


காஷ்மீரை சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் மோடி அழைப்பை ஏற்றனர்
x
தினத்தந்தி 22 Jun 2021 7:07 PM GMT (Updated: 22 Jun 2021 7:07 PM GMT)

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 6 கட்சிகளின் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று பரூக் அப்துல்லா அறிவித்தார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதனால், காஷ்மீரில் எதிரும், புதிருமாக இருந்த அரசியல் கட்சிகள் கைகோர்த்தன. முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தி, கூட்டணி அமைத்தன. பரூக் அப்துல்லா இல்லம், குப்கார் சாலையில் இருப்பதால், இந்த கூட்டணிக்கு குப்கார் கூட்டணி என்று பெயரிடப்பட்டது.

இதில், தேசிய மாநாட்டு கட்சி, முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி உள்பட 6 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இக்கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே, காஷ்மீரின் எதிர்காலம் தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்தில் உயர்மட்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடி தலைமை தாங்குகிறார். மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது பற்றியோ, சட்டசபை தேர்தல் நடத்துவது பற்றியோ பேசப்படும் என்று தொிகிறது.

இதில் பங்கேற்குமாறு 8 காஷ்மீர் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குப்கார் கூட்டணியை சேர்ந்த 6 கட்சிகளும் அடங்கும்.

இந்தநிலையில், மத்திய அரசின் அழைப்பை ஏற்பது குறித்து நேற்று பரூக் அப்துல்லா இல்லத்தில் 6 கட்சிகளின் பிரதிநிதிகளும் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், கூட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இதர தலைவர்கள் புடைசூழ பரூக் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அதனால், அழைப்பு வந்த நான், மெகபூபா முப்தி, தாரிகாமி உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் எங்களது நிலைப்பாட்டை எடுத்து வைக்க முடியும் என்று நம்புகிறோம்.

நேற்று என்ன நிலைப்பாடோ அதுதான் இன்றும், நாளையும் எங்களது நிலைப்பாடு ஆகும். பிரதமருடனான கூட்டம் முடிந்த பிறகு அதில் நாங்கள் என்ன பேசினோம், அவர்கள் என்ன பதில் அளித்தனர் என்பதை டெல்லியிலும், காஷ்மீரிலும் பத்திரிகையாளர்களிடம் சொல்வோம். என்ன பிரச்சினை பற்றி பேசப்படும் என்று மத்திய அரசு சொல்லவில்லை. என்ன பிரச்சினையாக இருந்தாலும், எங்களால் பேச முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story