குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆற்றை கடந்து சென்று தடுப்பூசி போடும் பெண் சுகாதார ஊழியர்


குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆற்றை கடந்து சென்று தடுப்பூசி போடும் பெண் சுகாதார ஊழியர்
x
தினத்தந்தி 22 Jun 2021 9:21 PM GMT (Updated: 2021-06-23T02:51:31+05:30)

ஜார்கண்ட் மாநிலத்தில் சுகாதார பெண் ஊழியர் ஒருவர் தனது 1½ வயது குழந்தையை முதுகில் சுமந்தபடி, கையில் தடுப்பூசி பெட்டியை எடுத்துக்கொண்டு ஆற்றை கடந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் லதேகார் பகுதியை சேர்ந்தவர் மந்திகுமாரி. இவர் செத்மா சுகாதார துணை மையத்தில் வேலை செய்கிறார். 8 கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

அனைத்து கிராமங்களும், அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆற்றை கடந்து சுமார் 35 கி.மீ. தூரம் நடந்து சென்றால்தான் இந்த கிராமங்களை அடைய முடியும்.

இவர் தனது குழந்தையை முதுகில் சுமந்து கொண்டும், கையில் தடுப்பூசி பெட்டியை எடுத்து கொண்டும் ஆற்றை கடந்து சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்.

இதுகுறித்து மந்திகுமாரி கூறியதாவது:-

இது எனக்கு ஒன்றும் புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோன்றுதான் பணியாற்றி உள்ளேன். பிரசவ கால விடுமுறை முடிந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன். அப்போதில் இருந்து குழந்தையை முதுகில் சுமந்தபடி இப்படித்தான் பணியாற்றி வருகிறேன்.

பல கிராமங்கள் இந்த ஆற்றை கடந்துதான் இருக்கிறது. மழைக்காலத்தில் இந்த ஆற்றை கடக்க முடியாது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த கிராமங்களில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அவரவர் வயதுக்கான தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும்

எனது கழுத்து பகுதி வரை கூட ஆற்று தண்ணீர் இருக்கும் போது தைரியமாக கடந்து விடுவேன். தினந்தோறும் காடு, ஆறு என 40 கி.மீ. மேல் நடந்து சென்று வருகிறேன். பல கிராமங்கள் நக்சலைட்டுகளின் கோரப்பிடியில் உள்ளது. அங்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது இன்னமும் பெரும் சவாலாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story