சரத்பவார் வீட்டில் 8 கட்சிகள் ஆலோசனை 3-வது அணி அமைக்க திட்டமா?


சரத்பவார் வீட்டில் 8 கட்சிகள் ஆலோசனை 3-வது அணி அமைக்க திட்டமா?
x
தினத்தந்தி 22 Jun 2021 9:32 PM GMT (Updated: 2021-06-23T03:02:50+05:30)

சரத்பவார் வீட்டில் 8 கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இதனால் 3-வது அணி பற்றிய யூகம் எழுந்துள்ளது.

புதுடெல்லி,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். மராட்டிய மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில், காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து பங்கேற்றுள்ளன.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சரத்பவார் விரும்புகிறார். இதற்காக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை அணி திரட்டி வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் சமீபத்தில் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், நேற்று சரத்பவார் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

அதில், முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா (திரிணாமுல் காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), கான்ஷ்யாம் திவாரி (சமாஜ்வாடி), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), சுசில் குப்தா (ஆம் ஆத்மி), பினாய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), நிலோத்பல் பாசு (மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவாரும் பங்கேற்றார்.

காங்கிரசில் இருந்து விலகிய சஞ்சய் ஜா, ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து விலகிய பவன் வர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா, கவிஞர் ஜாவீத் அக்தர், கே.சி.சிங் ஆகிய பிரபலங்களும் பங்கேற்றனர்.

பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைப்பது பற்றி இந்த கூட்டத்தில் பேசப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த கூட்டத்தை சரத்பவார் நடத்தியபோதிலும், இதை ‘ராஷ்டிரீய மஞ்ச்’ அமைப்பு சார்பில் யஷ்வந்த் சின்கா ஏற்பாடு செய்தார் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story