அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மெகபூபா முப்தி டெல்லி வருகை


அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மெகபூபா முப்தி டெல்லி வருகை
x
தினத்தந்தி 23 Jun 2021 1:15 PM GMT (Updated: 2021-06-23T18:45:29+05:30)

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு காஷ்மீர் தலைவர்களுடன் நடத்தும் முதல் கூட்டம் என்பதால் இக்கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய குப்கர் பிரகடனம் வெளியிடப்பட்டு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நாளை, ஜூன் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா  முப்தி, உமர் அப்துல்லா,உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீர் அரசியல் தலைவர்கள் டெல்லி வரத் தொடங்கியுள்ளனர். 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு காஷ்மீர் தலைவர்களுடன் நடத்தும் முதல்  கூட்டம் என்பதால் இக்கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Next Story