24 மணி நேரத்தில் 51 ஆயிரம் பேருக்கு தொற்று: 3 கோடியை தாண்டியது, கொரோனா பாதிப்பு


24 மணி நேரத்தில் 51 ஆயிரம் பேருக்கு தொற்று: 3 கோடியை தாண்டியது, கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 12:36 AM GMT (Updated: 24 Jun 2021 12:36 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியை தாண்டி விட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையை விட 2-வது அலை அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கூடுதலான உயிரிழப்புகளுக்கும் காரணமானது. கடந்த 50 நாட்களில் 1 கோடி பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாயினர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் இதுவரை இந்த வைரசின் கோரப்பிடியில் சிக்கியோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டி விட்டது. சரியாக 3 கோடியே 28 ஆயிரத்து 709 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

நேற்று முன்தினம் நாடெங்கும் 19 லட்சத்து 1,056 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிப்பு விகிதம் என்பது வெறும் 2.67 சதவீதம்தான். தொடர்ந்து 16-வது நாளாக பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்குள் கட்டுப்பட்டுள்ளது. வாராந்திர பாதிப்பும் 3.12 சதவீதம்தான்.

இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கையை விட, இதில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 41-வது நாளாக இது நடந்துள்ளது. 50 ஆயிரத்து 848 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், 68 ஆயிரத்து 817 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.

இதுவரையில் நாட்டில் 2 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரத்து 855 பேர் கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

மீட்பு விகிதம் 96.56 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கேரளாவில் நேற்று 11 ஆயிரத்து 730 பேர் கொரோனா தொற்றின் பிடியில் இருந்து குணம் அடைந்தனர்.

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று கொரோனாவால் ஏற்பட்ட உயிர்ப்பலி சற்றே அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 1,167 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 1,358 ஆக அதிகரித்தது. மேலும் இந்த தொற்றால் பலியானோர் மொத்த எண்ணிக்கையும் 3 லட்சத்து 90 ஆயிரத்து 660 ஆக உயர்ந்தது.

நேற்று மராட்டியத்தில் 482 பேரும், கேரளாவில் 141 பேரும், கர்நாடகத்தில் 139 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

அதே நேரத்தில், அந்தமான் நிகோபார், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன் டையு, லடாக், மிசோரம் ஆகியவற்றில் ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவில்லை என்பது கவனம் ஈர்க்கிறது.

கொரோனா இறப்புவிகிதம் 1.30 சதவீதமாக தொடர்கிறது.

கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றும் அந்த வகையில் இந்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 327 குறைந்தது. காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 194 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இது மொத்த பாதிப்பில் 2.14 சதவீதம் ஆகும்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா தொடர்ந்து கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்தும் பாதையில் சென்றுகொண்டிருப்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

Next Story