மே.வங்காளம்: வன்முறை நடைபெற்ற பகுதிகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு ஆய்வு


மே.வங்காளம்: வன்முறை நடைபெற்ற பகுதிகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு ஆய்வு
x
தினத்தந்தி 24 Jun 2021 9:58 AM GMT (Updated: 2021-06-24T15:28:12+05:30)

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடைபெற்ற பகுதிகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், குடும்பத்தினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். 

மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களும் நடைபெற்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் 7 பேர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தது.

இந்நிலையில், மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக விசாரணையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் குழு இன்று தொடங்கியுள்ளது. 

வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஒன்றான கோச்பிஹர் மாவட்டத்தில் அந்த குழு இன்று தனது முதல்கட்ட விசாரணையை தொடங்குகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து இந்த குழு விசாரணை நடத்த உள்ளது. 

Next Story