மத்திய பிரதேசத்தில் 6 டெல்டா பிளஸ் தொற்று- 56 ஆல்பா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 24 Jun 2021 11:56 AM GMT (Updated: 24 Jun 2021 11:56 AM GMT)

மத்தியப் பிரதேசத்தில் 1,219 மாதிரிகளில் 318 டெல்டா தொற்று பாதிப்புகளில் ஆறு டெல்டா பிளஸ் தொற்று மற்றும் 56 ஆல்பா பாதிப்புடனும் கண்டறியப்பட்டு உள்ளது.

போபால்

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல் காணப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சமீபத்தில் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது வேறு பல நாடுகளில் பரவி வருவதும் கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் கொரோனாவின் மற்றொரு மாறுபாடான டெல்டா பிளஸ் தொற்று (ஏ.ஒய்.1) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலும் தனது வேலையை காட்டி வருகிறது. அந்தவகையில் மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 40 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் தொற்றால் இரண்டுபேர் பலியாகி உள்ளனர்.  நவம்பர் 2020 முதல் மரபணு வரிசைப்படுத்துதலுக்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு (என்சிடிசி) அனுப்பிய 2,025 மாதிரிகளில் 380 இல் கொரோனா வகைகளைக் கண்டறிந்துள்ளது.

இதுவரை 1,219 மாதிரிகள் பற்றிய அறிக்கைகள்  கிடைத்துள்ளன, அவற்றில் 318 டெல்டா மாறுபாட்டுடன் (பி .1.617.2) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது  இந்தியாவில் இரண்டாவது அலையின் போது வைரஸ் வேகமாக பரவ காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசம் இதுவரை டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று  (பி.1.617.2.1 / (ஏஒய்.1) 6 பாதிப்புகள் மற்றும் 56  ஆல்பா வைரஸ் தொற்று (பி.1.1.7) பாதிப்புகளை  பதிவு செய்துள்ளன. இதனை சுகாதார ஆணையர் ஆகாஷ்  திரிபாதி உறுதிப்படுத்தி உள்ளார்.

Next Story