தடுப்பூசி மீதான மக்களின் தயக்கத்தை போக்க வேண்டும் - காங்கிரஸ் தொண்டர்களுக்கு சோனியா வேண்டுகோள்


தடுப்பூசி மீதான மக்களின் தயக்கத்தை போக்க வேண்டும் - காங்கிரஸ் தொண்டர்களுக்கு சோனியா வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Jun 2021 6:10 PM GMT (Updated: 24 Jun 2021 6:10 PM GMT)

தடுப்பூசி மீதான மக்களின் தயக்கத்தை போக்க காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கட்சித்தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தை மெய்நிகர் முறையில் கட்சித்தலைவர் சோனியா காந்தி நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய சோனியா, நாடு முழுவதும் நடைபெற்று வரும் தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

மேலும் இந்த பணிகளில் காங்கிரசாரின் கடமைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:-

தேசிய அளவில், தினசரி தடுப்பூசி விகிதம் மும்மடங்கு இருக்க வேண்டும். அதன்மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நமது மக்கள் தொகையில் 75 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போட முடியும். ஆனால் இது முற்றிலும் தடுப்பூசி வினியோகத்தை பொறுத்தது ஆகும். இதற்காக நாம் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதேநேரம், தடுப்பூசிக்கான பதிவு நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு எந்த பகுதியிலும் மக்களிடம் தயக்கம் ஏற்பட்டாலும் அதை போக்க உழைக்க வேண்டும். அத்துடன் தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும். இந்த பெருந்தொற்று காலத்தில் அனைவரையும் தடுப்பூசி சென்று சேர்வதை உறுதி செய்யும் பணியில் நிச்சயமாக நமது கட்சியும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

கொரோனா நேரத்தில் மக்களின் துயர் துடைப்பதில் நமது முயற்சிகளை தொடர வேண்டும். கட்டுப்பாட்டு அறைகள், அவசர உதவி எண்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். ஆம்புலன்ஸ், அத்தியாவசிய மருந்துகள் போன்ற அவசர சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனாவின் 3-வது அலை தாக்கும் என நமது வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள். இது குழந்தைகளை வெகுவாக பாதிக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மீதும் நமது அவசர கவனம் தேவை. அத்துடன் இந்த பேரழிவிலிருந்து மக்கள் தப்பிக்க நாம் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 3-வது அலை எப்போது தாக்கினாலும் அதை எதிர்கொள்வதற்கு சிறப்பாக தயாராக வேண்டும்.

கடந்த 4 மாதங்களாக நாட்டை அலைக்கழித்த 2-வது அலையால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பேரழிவை சந்தித்தன. இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த பேரழிவை மீண்டும் சந்திக்க வேண்டிய அவசியம் இராது.

கொரோனா மேலாண்மை தொடர்பாக காங்கிரஸ் தயாரித்த வெள்ளை அறிக்கை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. விரிவான இந்த அறிக்கையை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை மக்கள் மீது சகிக்க முடியாத சுமையை ஏற்படுத்தி வருகிறது. இது விவசாயிகளையும், லட்சக்கணக்கான குடும்பங்களையும் எவ்வாறு பாதித்து வருகிறது என்பதை முன்னிலைப்படுத்த போராட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

எரிபொருள் விலையை தவிர, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இது மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. வேலையின்மை மற்றும் வரலாறு காணாத வகையில் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதிகரித்துவரும் இந்த விலைவாசி உயர்வு மக்களை இன்னும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

Next Story