எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா குறித்து 10 நாட்களில் முடிவு அறிவிப்பேன்: முன்னாள் கர்நாடக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி


எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா குறித்து 10 நாட்களில் முடிவு அறிவிப்பேன்: முன்னாள் கர்நாடக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி
x
தினத்தந்தி 25 Jun 2021 3:50 PM GMT (Updated: 2021-06-25T21:20:29+05:30)

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது குறித்து 10 நாட்களில் எனது முடிவை அறிவிப்பேன் என்று ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

ரமேஷ் ஜார்கிகோளிக்கு நற்சான்றிதழ்

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம் பெண்ணுடன் படுக்கையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். வேலை வாங்கி தருவதாக தன்னை ஏமாற்றி கற்பழித்ததாக ரமேஷ் ஜார்கிகோளி மீது பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி. போலீசார், அந்த இளம்பெண் மீது "ஹனிடிராப்" அதாவது உல்லாச ஆசை காட்டி ஏமாற்றி பணம் பறிப்பது குறித்த வழக்கை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ரமேஷ் ஜார்கிகோளிக்கு நற்சான்றிதழ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் சற்று மகிழ்ச்சியில் உள்ளார்.

மடாதிபதியுடன் சந்திப்பு

இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி நேற்று பெலகாவியில் இருந்து தனி விமான மூலம் மைசூருவுக்கு வந்து, அங்கு சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்று பெலகாவிக்கு திரும்பினார். உடன் அவரது சகோதரர் லகன் ஜார்கிகோளியும் வந்திருந்தார். முன்னதாக ரமேஷ் ஜார்கிகோளி மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

அரசியல் பற்றி பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை. மடாபதி தேசிகேந்திர சாமியிடம் ஆசி பெறவும், சமீபத்தில் அவரது தாய் இறந்ததால் துக்கம் விசாரித்து ஆறுதல் கூற வந்தேன். முதல்-மந்திரி எடியூரப்பா என்னை சந்தித்து பேச அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி எனக்கு தெரியாது. நான் மும்பைக்கு சென்றது அரசியல் பேச தான். ஆனால் மைசூருவுக்கு அரசியல் பேச வரவில்லை.

அவசியம் இல்லை

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்ததே நான் தான். அதனால் அதற்கு பரிசாக மந்திரி பதவியை கேட்கிறேன். மந்திரி பதவிக்காக நான் மடாதிபதியை சந்தித்து பேசவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. யாரிடமும் சென்று எனக்கு மந்திரி பதவி வழங்குங்கள் என்று பிச்சை கேட்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. ஒரு அரசை கவிழ்த்து இன்னொரு அரசை ஆட்சியில் அமர்த்தும் பலத்தை எனக்கு கடவுள் கொடுத்து உள்ளார். என்னை நம்பி வந்தவர்களுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

10 நாட்களில் முடிவு

இதையடுத்து பெலகாவிக்கு சென்ற ரமேஷ் ஜார்கிகோளி அங்கு பேட்டி அளிக்கையில் கூறும்போது:-

நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். அதுகுறித்து ஏற்கனவே தகவல் வெளியானது. அது உண்மை தான். பாலியல் புகாருக்கு பிறகு பா.ஜனதா என்னை அன்பாக பார்த்துக் கொண்டது. ஆனால் கட்சியை சேர்ந்த சில தலைவர்களின் செயல் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா குறித்து இன்னும் 10 நாட்களில் முக்கிய முடிவை அறிவிப்பேன்.

பட்னாவிஸ்எனது அரசியல் குரு

நான் மும்பையில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்து பேசினேன். அவரிடம் அரசியல் பேசினேன். அவர் எனது அரசியல் குரு. அவரிடம் எனது மனக்குமுறல்கள், வலி, வேதனைகளை பகிர்ந்து கொண்டேன். நான் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன். காங்கிரசில் சேரும் பேச்சுக்கே இடமில்லை. அக்கட்சி ஒரு மூழ்கும் படகு. அத்தகைய கட்சியில் நான் எதற்காக சேர வேண்டும்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.


Next Story