கொரோனாவின் 2-வது அலை இன்னும் ஓயவில்லை இந்தியாவில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று


கொரோனாவின் 2-வது அலை இன்னும் ஓயவில்லை இந்தியாவில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று
x
தினத்தந்தி 26 Jun 2021 12:12 AM GMT (Updated: 2021-06-26T05:42:33+05:30)

இந்தியாவில் இதுவரை 51 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இதில் சமீப நாட்களாக டெல்டா, டெல்டா பிளஸ் என 2 மாறுபாடு அடைந்த வைரஸ்கள் பரவலாக கண்டறியப்பட்டு வருகின்றன.

இதில் டெல்டா வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது ஆகும். இது ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரசை விட அதிக வேகமாக பரவும் திறன் வாய்ந்தது ஆகும்.

இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்டா பிளஸ் தொற்று பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த தொற்றுகள், அரசுகளை கவலையுற வைத்துள்ளன. குறிப்பாக டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலைக்கு காரணமாகி விடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டில் டெல்டா பிளஸ் தொற்றின் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடு முழுவதும் இதுவரை பரிசோதிக்கப்பட்ட 45 ஆயிரம் மாதிரிகளில் 51 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக 22 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மத்திய பிரதேசம் (7), கேரளா (3), பஞ்சாப், குஜராத்தில் தலா 2, ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், காஷ்மீர் மற்றும் கர்நாடகா, அரியானாவில் தலா ஒருவர் என வேறு சில மாநிலங்களிலும் இந்த தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 90 சதவீத கொரோனா தொற்றுகளுக்கு டெல்டா வைரசே காரணம். அந்தவகையில் நாட்டின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 175 மாவட்டங்களில் இந்த கவலைக்குரிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில் மராட்டியம், டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.

கவலைக்குரிய மாறுபாடுகளுடன் கூடிய கொரோனா பாதிப்புகளின் விகிதம் கடந்த மே மாதத்தில் 10.31 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 20-ந் தேதி இது 51 சதவீதமாக உயர்ந்திருந்தது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என கொரோனாவின் அனைத்து மாறுபாடுகளுக்கும் எதிராக சிறப்பாக செயல்படுகின்றன.

நாட்டில் கொரோனாவின் 2-வது அலை இன்னும் ஓயவில்லை. 75 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் இன்னும் 10-க்கு மேல் நீடிக்கிறது. அதேநேரம் 92 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி கூட்டம் சேருவதை தவிர்த்தல், பரிசோதனையை அதிகரித்தல், தேவை அதிகம் இருக்கும் மாவட்டங்களின் அடிப்படையில் தடுப்பூசி போடுவதை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story