சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி:அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்


சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி:அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்
x
தினத்தந்தி 26 Jun 2021 11:06 AM GMT (Updated: 26 Jun 2021 11:06 AM GMT)

சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை:

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி சச்சின்வாசி கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய பரம்வீர் சிங் உள்துறை மந்திரி  அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு சச்சின்வாசியை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதன்பிறகு அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரூபாயை அமலாக்க  அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும், உதவி ஆய்வாளர் சச்சின் வாசியால்  சில மாதங்களில் திரட்டப்பட்டதாகவும்  அமலாக்கதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பணம் மராட்டியத்திற்கு வெளியே அமைந்துள்ள சில ஷெல் நிறுவனங்கள் மூலம் தேஷ்முகுக்கு நிறுவனத்திற்கு விடப்பட்டதாக அந்த அமலாக்கத்துறை  கண்டறிந்துள்ளது. இந்நிறுவனம் தேஷ்முக்கின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது.

Next Story