முககவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி


முககவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி
x
தினத்தந்தி 27 Jun 2021 4:00 AM GMT (Updated: 27 Jun 2021 4:00 AM GMT)

முககவசம் அணியாதது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

பரேலி, 

உத்தரபிரதேசத்தின் பரேலியை சேர்ந்த ரெயில்வே ஊழியரான ராஜேஷ் ரத்தோர் என்பவர், தனது வங்கி கணக்கு புத்தகத்தில் பரிமாற்ற விவரங்களை பதிவேற்றுவதற்காக அங்குள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளைக்கு சென்றார்.

ஆனால் அவர் முககசவம் அணியாததால், வங்கி ஊழியர்கள், ராஜேஷ் ரத்தோருக்கு எந்தவித சேவையையும் வழங்கவில்லை. எனவே அவர் வெளியில் சென்று முககவசம் ஒன்றை வாங்கி அணிந்து வந்தார். அப்போது அவரை உள்ளே விட வங்கி காவலாளி மறுத்தார். முககவசம் அணியாதது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த காவலாளி, ராஜேஷ் ரத்தோர் மீது துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இடது தொடையில் குண்டுபாய்ந்து பலத்த காயம் அடைந்தார். வலியால் அலறிய அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே தனது மனைவிக்கு போன் செய்து அழைத்து அவர் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வங்கிக்கு வந்து அந்த காவலாளியிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். தனியார் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு ஊழியரான அவர் பின்னர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார். முககவசம் அணியாமல் வந்தவரை வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story