இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 Jun 2021 4:27 AM GMT (Updated: 2021-06-27T09:57:56+05:30)

இந்தியாவில் 5,86,403 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 2.82% ஆக உள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.

நேற்று தினசரி பாதிப்பு 48  ஆயிரத்துக்குள் வந்து விட்டது. காலை 8 மணி வரையில் இந்த தொற்றினால் 50 ஆயிரத்து 040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பிடியில் சிக்கியோர் மொத்த எண்ணிக்கை, 3 கோடியே 02 லட்சத்து 33 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைக் காட்டிலும், அதில் இருந்து மீட்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று  இது 45வது நாளாக தொடர்ந்தது.  50  ஆயிரத்து 040 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 57 ஆயிரத்து 944  பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீட்பு விகிதமும் 96.72 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.31% ஆக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக நாடெங்கும் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இன்றும் இந்த எண்ணிக்கை சரிந்தது.

இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6 லட்சத்துக்குள் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சரியாக 5 லட்சத்து 86 ஆயிரத்து 403 பேர் தொற்றில் இருந்து குணம் அடைவதற்காக சிகிச்சையில் உள்ளனர். 

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,94,493 லிருந்து 3,95,751 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Next Story