மிகக்குறைந்த வெப்பநிலையில் தடுப்பூசிகளை சேமிக்கும் திறன் இந்தியாவில் உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


மிகக்குறைந்த வெப்பநிலையில் தடுப்பூசிகளை சேமிக்கும் திறன் இந்தியாவில் உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2021 7:32 PM GMT (Updated: 27 Jun 2021 7:32 PM GMT)

மிகக்குறைவான வெப்ப நிலையில் தடுப்பூசிகளை சேமிக்கும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று நோயின்போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் வினியோகம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன் வந்து ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

கடந்த மே மாதம் 31-ந் தேதி நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விரிவான பதில்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி மத்திய அரசின் பிரமாண பத்திரம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டி உள்ளது.

* எதிர்காலத்தில் (வெளிநாடுகளில் இருந்து) கொரோனா தடுப்பூசிகளின் வருகையின்போது, குளிர் சேமிப்புக்காக தேவை மாறக்கூடும். அதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

* மிகக்குறைந்த வெப்ப நிலையில், அதாவது மைனஸ் 15 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தடுப்பூசிகளை வைத்து சேமிப்பதற்கான திறன் நாட்டில் உள்ளது. ரஷிய தடுப்பூசியை (ஸ்புட்னிக்-வி) சேமிப்பதற்கு மைனஸ் 18 டிகிரி வெப்ப நிலை தேவைப்படுகிறது.

* நாடு முழுவதும் 29 ஆயிரம் குளிர் சங்கிலி முனையங்கள் உள்ளன. இங்கு பரிந்துரைக்கப்பட்ட வெப்ப நிலையில் தடுப்பூசிகளை சேமித்து வைக்கலாம். இந்த முனையங்களில், ‘வாக் இன் கூலர்’கள், ‘பிரீசர்’கள், குளிர்பதனப்பெட்டிகள், குளிர் பெட்டிகள் போன்றவை உள்ளன.

* நாட்டில் மொத்தம் 37 மாநில தடுப்பூசி ஸ்டோர்கள், 114 பிராந்திய தடுப்பூசி ஸ்டோர்கள், 723 மாவட்ட தடுப்பூசி ஸ்டோர்கள், 28 ஆயிரத்து 268 துணை மாவட்ட தடுப்பூசி ஸ்டோர்கள் உள்ளன.

* உலகளவிலான தடுப்பூசி திட்டத்துக்கும், கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கும் தேவைப்படுகிற குளிர் சங்கிலி தளவாடங்களை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வழங்கி உள்ளது. அவற்றினை பராமரிப்பதற்கும், குளிர் சங்கிலி தொழில்நுட்ப வல்லுனர்களை அமர்த்தவும் தேசிய சுகாதார இயக்கம், திட்ட அமலாக்க திட்டம் ஆகியவற்றின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

* குளிர் சேமிப்பு தளவாடங்கள் யுனிசெப் போன்ற நன்கொடையாளர்களால் வழங்கப்படுகின்றன. இவை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

* கடந்த 25-ந் தேதி வரையில் நாடு முழுவதும் 31 கோடி தடுப்பூசி டோஸ்கள், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறி உள்ளது.

Next Story