மத்திய பிரதேசத்தில் ரூ.5 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் - 8 பேர் கைது


மத்திய பிரதேசத்தில் ரூ.5 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் - 8 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 10:30 PM GMT (Updated: 27 Jun 2021 10:30 PM GMT)

மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அளவுக்கு கள்ள நோட்டுகள் சிக்கியிருக்கும் விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போபால்,

மத்திய பிரதேசத்தின் பாலாகாட் பகுதியில் மிகப்பெரிய அளவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து 2 நாட்களாக தீவிர நடவடிக்கையில் இறங்கிய போலீசார், அந்த கள்ளநோட்டு கும்பலை கையும் களவுமாக மடக்கினர்.

அந்த வகையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் 2 பேர் அண்டை மாநிலமான மராட்டியத்தில் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் ரூ.10 முதல் ரூ.2 ஆயிரம் வரை பல்வேறு மதிப்புகளில் அச்சிடப்பட்டு இருந்தன.

இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் எங்கிருந்து அச்சிடப்பட்டன? இதன் பின்னணியில் இருக்கும் மர்ம நபர்கள் யார் யார்? என போலீசார் துருவித்துருவி விசாரித்து வருகின்றனா். மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அளவுக்கு கள்ள நோட்டுகள் சிக்கியிருக்கும் விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story