பிறந்த இடம், சொர்க்கத்தை விட உயர்ந்தது - சொந்த ஊரில் ஜனாதிபதி நெகிழ்ச்சி


பிறந்த இடம், சொர்க்கத்தை விட உயர்ந்தது - சொந்த ஊரில் ஜனாதிபதி நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Jun 2021 1:20 AM GMT (Updated: 28 Jun 2021 1:20 AM GMT)

பிறந்த இடம், சொர்க்கத்தை விட உயர்ந்தது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊரில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

லக்னோ,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் நேற்று அவர் கான்பூர் தேகத் மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த பராங் கிராமத்துக்கு சென்றார்.

மனைவி மற்றும் மகளுடன் பராங் சென்ற ஜனாதிபதி, கிராமத்துக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும், குனிந்து தனது கிராமத்தின் மண்ணை தொட்டு கும்பிட்டார்.

பின்னர் அங்கு தனது குடும்பத்தினர் சார்பில் அந்த கிராமத்து முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். சொந்த ஊரில் உள்ள உறவினர்களை சந்தித்ததால் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதை தனது உரையிலும் அவர் எதிரொலித்தார்.

நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

பிறந்த இடத்துடனான மகிழ்ச்சியையும், பெருமையையும் கூறுவதென்றால், பெற்றெடுத்த தாயும், பிறந்த இடமும் சொர்க்கத்தை விட உயர்ந்தது ஆகும். இந்த தாய்மண் கொடுத்த ஊக்கத்தால் ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டில் இருந்து மாநிலங்களவைக்கும், மாநிலங்களவையில் இருந்து கவர்னர் மாளிகைக்கும் பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி மாளிகைக்கும் சென்றுள்ளேன்.

ஆனால் எங்கெல்லாம் நான் தங்கினாலும், எனது கிராமத்தின் மண் வாசனையும், எனது வாழ்வின் நினைவலைகளும் எப்போதும் எனது உள்ளத்தில் இருக்கும். என்னை பொறுத்தவரை பராங், வெறும் ஒரு கிராமம் மட்டுமல்ல. இது எனது தாய்மண். வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளை எட்டுவதற்கும், நாட்டுக்கு சேவை புரியவும் இந்த மண்தான் உத்வேகம் அளித்தது.

சாதாரண கிராமத்தை சேர்ந்த என்னைப்போன்ற ஒரு சிறுவன், இவ்வளவு பெரிய பொறுப்புகள் மிகுந்த நாட்டின் உயர் பதவியை அடைவேன் என ஒருபோதும் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால் நமது ஜனநாயக அமைப்பு இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

இந்த நேரத்தில் நமது சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அரசியல்சாசனத்தை வடிவமைத்தவர்களை, தங்கள் மதிப்பற்ற தியாகம் மற்றும் பங்களிப்புக்காக நான் வணங்குகிறேன். உண்மையில் இன்று நான் இங்கே வந்திருக்கிறேன் என்றால், அதற்காக இந்த கிராமத்தின் மண் மற்றும் உங்களின் அன்பு, ஆசீர்வாதத்துக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

இந்த கிராமத்தின் மிகவும் மூத்த ஆண் மற்றும் பெண், அவர்கள் என்ன சாதியோ, இனமோ, பிரிவையோ சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவிப்பது எங்கள் குடும்பத்தின் பாரம்பரியம் ஆகும். மூத்தவர்களை மதிக்கும் இந்த வழக்கம் தற்போதும் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது.

மாதா, பிதா, குரு வணக்கம் நமது கலாசாரம் நமக்கு அளிக்கும் பாடம் ஆகும். அதே பாடம் எங்கள் வீட்டிலும் கற்பிக்கப்படுகிறது. பெற்றோர், குருக்கள் மற்றும் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது கிராமப்புற கலாசாரத்தில் தெளிவாக உள்ளது.

தடுப்பூசி போட்டு கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும் கவசமாக தடுப்பூசி உள்ளது. அதனால்தான் நீங்களும் தடுப்பூசி போட்டு அடுத்தவரையும் ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் கிராமத்தை சேர்ந்த ஆண், பெண் முதியோருக்கு ராம்நாத் கோவிந்தின் சகோதரரும், அவரது மனைவியும் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள கல்லூரியின் முதல்வரும் கவுரவிக்கப்பட்டார்.

முன்னதாக பராங் கிராமத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல் மற்றும் கிராமத்தினர் வரவேற்றனர்.

Next Story