ஆயுத ‘சப்ளை’க்கு எந்தெந்த வகையில் டிரோன்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்கள்? அதிர்ச்சி தகவல்


ஆயுத ‘சப்ளை’க்கு எந்தெந்த வகையில் டிரோன்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்கள்? அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2021 6:36 PM GMT (Updated: 28 Jun 2021 6:36 PM GMT)

கடந்த 2 ஆண்டுகளில் ஆயுத சப்ளைக்கு எந்தெந்த வகையில் டிரோன்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்கள்? என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டிரோன்கள் மூலம் தாக்குதல்
ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று முன்தினம் டிரோன்கள் மூலம் குண்டுகள் போடப்பட்டு, கொடூரமான தாக்குதல் நடந்தது. கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அதிர்ச்சி சம்பவம், இந்தியாவில் முதல் முறையாக நடந்திருக்கிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில்தான் இந்த தாக்குதல் நடந்த ஜம்மு விமானப்படை தளம் அமைந்துள்ளது.எனவே அந்த எல்லைப்பகுதியில் இருந்து டிரோன்கள் பறந்து வந்து, ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் இடத்தை சேதப்படுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜம்மு விமானப்படை தள தாக்குதலுக்காக டிரோன் மூலம் போடப்பட்ட குண்டு, அதிக சக்தி வாய்ந்தது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
டிரோன்கள் தாழ்வாக பறக்கக்கூடியது. இதனால் ரேடார்களின் பார்வையில் சிக்காமல், எளிதாக தப்பித்துக்கொள்ளும். இந்திய எல்லை பகுதிகளுக்குள் ஆயுதங்கள் சப்ளை செய்வதற்கு, வெடிகுண்டுகள், போதை பொருட்களை கடத்துவதற்கு, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக, டிரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். வான்வழியாக கண்காணிப்பதை தவிர, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் டிரோன்களை பயன்படுத்தி ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதை பொருட்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரும் போக்கின் நீட்சிதான் தற்போதைய ஜம்மு விமானப்படை தள தாக்குதல் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் பாகிஸ்தான் எல்லையில் 167 டிரோன்கள் பறந்ததும், 2020-ம் ஆண்டு 77 டிரோன்கள் பறந்ததும் பார்க்கப்பட்டுள்ளது.

சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்
டிரோன்கள் மூலம் கடத்தி கொண்டுவரப்பட்ட 16 கையெறி குண்டுகள், ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் அடங்கிய 9 குப்பிகள், கை துப்பாக்கிகள், வெடிபொருட்களை கைப்பற்ற முயன்றபோது கையும்களவுமாக 2 பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.மற்றொரு சம்பவமாக கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலமாக பஞ்சாப் எல்லைக்குள் போடப்பட்ட 11 கையெறிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீரின் கேரன் செக்டாரில் உள்ள எல்லையில் பறந்த டிரோனை, இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்முவில் ஹிரா நகர் செக்டாரில் உள்ள ரத்துவா கிராமத்தின் அருகே அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஏராளமான கையெறிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்களை போட்ட டிரோனை, எல்லை 
பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே உள்ள தரம்கோட் ரந்தாவா பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி நள்ளிரவில் 2 பெரிய துப்பாக்கிகள், 6 கை துப்பாக்கிகள் மற்றும் ரூ.4 லட்சம் கள்ள நோட்டு ஆகியவை 3 டிரோன்களில் போடப்பட்டன. விசாரணையில் இது பாகிஸ்தானை சேர்ந்த காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பின் தலைவர் ரஞ்சித் சிங் நீதா தூண்டுதலின்பேரில் அனுப்பப்பட்டது தெரியவந்தது.2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந்தேதி காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கையை முறியடித்த பஞ்சாப் போலீஸ், அந்த இயக்கத்தின் சார்பில் டிரோன்கள் மூலம் பஞ்சாப் எல்லைக்குள் போடப்பட்ட 5 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் அடங்கிய 9 குப்பி, சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 கை துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அடங்கிய 8 குப்பி, 9 கையெறி குண்டுகள், 472 தோட்டாக்கள், ரூ.10 லட்சம் கள்ள நோட்டு மற்றும் 5 சாட்டிலைட் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பயங்கரவாதிகளின் விருப்பமான கருவி
பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் டிரோன்களை பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதனை முறியடிக்க தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகள் தேவைப்படுகிறது. எல்லைப்பகுதிகளில் டிரோன்களை தடுப்பதற்கு ஜாமர்கள் நிறுவப்படுவது பயன் உள்ளதாக இருக்க முடியாது. ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களை தடுப்பதற்காக பாதுகாப்பு கருதி நிறுவப்படலாம் என்று ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயுதம் தாங்கிய டிரோன்களை தாக்குதலுக்காக வடக்கு ஈராக் தான் முதன் முதலாக கடந்த 2016-ம் ஆண்டு பயன்படுத்தியது. தாக்குதல் நடத்துவதற்கு விருப்பமான கருவியாக ஆளில்லா குட்டி விமானம் என்று அழைக்கப்படும் டிரோன்களை தற்போது பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். வெடிகுண்டுகளை சுமந்து வரும் இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட சாதனங்களால், அதனை கண்டுபிடித்து முறியடிப்பதற்குரிய சவால்கள் தற்போது பாதுகாப்பு படைக்கு 
அதிகரித்துள்ளது.

Next Story