உத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார் சந்திப்பு


உத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார் சந்திப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 9:07 PM GMT (Updated: 29 Jun 2021 9:07 PM GMT)

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படோலே, அடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று கூறினார்.

தற்போதைய கொரோனா சூழலில் தேர்தல் பற்றி பேசினால் மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்தார். முன்னதாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் சிவசேனா தனது பழைய நட்பு கட்சியான பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று யூகங்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு மத்தியில் நேற்று உத்தவ் தாக்கரேயை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் நடைபெற்றது. சட்டசபை கூட்டத் தொடர் வருகிற 5-ந் தேதி தொடங்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் தலைமையில் கூடி பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story